சுதா கொங்காரா இயக்கத்தில் பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள பராசக்தி வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி , நடிகர் கமல் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் பராசக்தி. சிவாஜி கணேசன் நடித்த கிளாசிக் படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு வைத்துள்ளார்கள். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார் . ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் . ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பராசக்தி ரிலீஸ் தேதியில் மாற்றம்
சூரரைப் போற்று படத்திற்கு பின் மீண்டும் சுதா கொங்காரா மற்றும் சூர்யா கூட்டணி புறநாநூறு படத்தில் இணைய இருந்தது. சூர்யா இந்த படத்தில் இருந்து விலக பின் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி விஜயின் ஜனநாயகன் படம் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த நாளே பராசக்தி வெளியாக இருக்கிறது. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. படத்தை முன்னதாக வெளியிடச் சொல்லி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்ததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இசை வெளியீடு
பராசக்தி படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100 ஆவது படமாகும். படத்தின் இசை வெளியீடு வரும் ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.