காதலின் தீபம் ஒன்று... என நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் தீபத்தை ஏற்றி அவரின் திரைப்பயணத்தை அழகானதாக மாற்றி அனைவரும் விரும்பும் ஒரு ஜனரஞ்சக ஹீரோவாக உருமாற்றிய திரைப்படம் தான் 1984ம் ஆண்டு வெளியான 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படம். 80ஸ் கிட்ஸ்களின் மலரும் நினைவுகளில் இன்றும் பசுமையாக இருக்கும் இந்த திரைப்படம் இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



ரொமான்டிக் ஹியூமர் ஹீரோ:


ஆக்ஷன் நடிகராக பட்டையை கிளப்பி மாஸ் பர்ஃபார்மன்ஸ் கொடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்தை ஒரு கிளாஸ் ரொமான்டிக் ஹீரோவாக காட்சிப்படுத்தி அவருக்குள் இருக்கும் ஹியூமர் சென்ஸை வெளியே கொண்டு வந்த திரைப்படம். நடிகர் ரஜினிகாந்த் படங்களின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது அதன் கதை, திரைக்கதை, வசனம் தான்.  அதில் பெரும்பாலான படங்களுக்கு அனைத்தையும் எழுதியவர்  பஞ்சு அருணாச்சலம். இந்த படத்தில் அவர் ஒரு படி மேலே சென்று அவரே தயாரிக்க இயக்குநர் ராஜேந்திரன் இயக்கி இருந்தார். 


முன்கோபி ரஜினி : 


பணக்கார வீட்டு பையன் என்ற மமதையில் பணத்தின் அருமை தெரியாமல் முன் கோபத்தால் வீண் வம்பு இழுத்து,  ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்த மகனை நல்வழிப்படுத்துவதற்காக கிராமத்தில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் ரஜினி. பணக்கார வீட்டு பையன் என்ற உண்மையை சொல்ல கூடாது என கண்டிஷனுடன் அனுப்பிவைக்கப்படுகிறார் ரஜினி. இதுவரையில் ரஜினிக்கு வில்லனாக பார்த்து பழக்கப்பட்ட நடிகர் செந்தாமரை இந்த படத்தில் அவருக்கு பாதுகாவலராக நடித்திருந்தார். 


 



முக்கோண காதல் : 


ரஜினி மாதவியை காதலிக்க, செந்தாமரை மகள் சுலோக்சனா ஒரு தலையாக ரஜினியை காதலிக்கிறார். இதில் யாருடைய காதல் நிறைவேறியது? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். 


பவ்யமான தனி ஸ்டைல் :


இன்று நான் பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸான தோற்றம் போல அல்லாமல் 80ஸ் காலகட்டத்தில் அவருக்கு  பவ்யமான தனி ஸ்டைல் ஒன்று இருந்தது. சைடு வகுடு எடுத்து வாரிய ஹேர்ஸ்டைல், டக் இன் செய்த ஷர்ட், ஸ்லிம் பாடி, கிளீன் ஷேவ் செய்யப்பட்ட பாந்தமான முகம் என அவரின் தோற்றமே படு கிளாஸியாக இருக்கும். காதல், ஆக்ஷன், காமெடி என கலந்துகட்டி கலக்கிய ரஜினி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். 



பாம்பு காட்சி : 


ரஜினியின் பாம்பு சீன் இன்று வரை மிகவும் பிரபலமான காமெடி சீன். அதனாலேயே என்னவோ ரஜினியின் பெரும்பாலான படங்களில் பாம்பை வைத்து ஒரு காமெடி சீன் இடம்பெறும். ஜனகராஜ்  - ரஜினி காம்போ காமெடி ஒரு விதமாக வித்தியாசமாக இருக்கும். அதுவும் இந்த படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. 


வலு சேர்த்த இசை : 


'தம்பிக்கு எந்த ஊரு' படத்தின் இசை கூடுதல் பலம் சேர்த்தது. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பியின் குரலில் ஒலித்த 'காதலின் தீபம் ஒன்று...' பாடல் இன்று வரை ரஜினியின் எவர்கிரீன் ஹிட்ஸ்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. அதிலும் அந்த பாடலின் காட்சியமைப்பு, ரஜினியின் ஸ்டைலிஷ் லுக், அலட்டி கொள்ளாத லைட்டான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் என அந்த பாடல் வேறு லெவல் வைப் கொடுத்தது. 


நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு ட்ரெண்ட் செட்டிங் படமாக அமைந்த 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படம் அன்றும் இன்றும் என்றும் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடப்படும்.