நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


தமிழக வெற்றி கழகம் 


நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இன்றைய நிலவரத்துக்கு அதிகளவில் ரசிகர்களை கொண்டுள்ள அவர் இன்னும் 2 படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். ஆம்! ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அரசியல் வருகை குறித்து பிப்ரவரி 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார் நடிகர் விஜய். தான் தொடங்கியுள்ள கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


இதுதொடர்பான அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. ஆனால் முழுமையான சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர  அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம் என்ற தற்போதைய அரசியல் சூழல் அனைவரும் அறிந்ததே. 






தன்னலமற்ற வெளிப்படையான சாதிமத பேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது தீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்அதன்படியே "தமிழக வெற்றி கழகம்' என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சிப்பின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார். 


வருகையும் எதிர்ப்பும் 


இதனிடையே விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று வருகை தந்த நடிகர் ரஜினிகாந்திடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “வாழ்த்துகள்” என தெரிவித்தார். 


முன்னதாக 25 ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டே அரசியல் வருகையை அறிவித்தார். ஆனால் 2020 கொரோனா பரவிய நேரத்தில் திடீரென கட்சி தொடங்கப்படும் முடிவை கைவிடுவதாக தெரிவித்த ரஜினி, கட்சி தொடங்க ரசிகர்களின் நலனை பணயம் வைக்க முடியாது என தெரிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.