படையப்பா படத்தில் ரஜினியின் இரண்டாவது மகளாக நடித்த அனிதா வெங்கட் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.


படையப்பா படத்தில் இரண்டாவது மகள் கேரக்டரே இல்லை எனக்காகவே ரஜினி சார் அந்த கேரக்டரை உருவாக்கினார். நான் அந்தப் படத்தில் நடித்ததே மிகப்பெரிய கதைதான்.


நான் ஆஹா படத்தில் விஜயகுமார் சாருக்கு மகளாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பக்கத்து செட்டில் படையப்பா சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் விஜயகுமார் அங்கிள் என் கிட்ட உனக்கு ரஜினி பிடிக்குமான்னு கேட்டார். நான் சார் என்ன இப்படி கேட்டிட்டீங்கனு சொன்னேன். சரி வான்னு கூட்டிட்டுப் போனார். செட்டுக்குள்ள நுழைந்தால் ரஜினி சார் இருக்கார். எனக்கு அப்படியே ஷாக் அவர்கிட்ட விஜயகுமார் அங்கிள் என்னை இண்ட்ரோ பண்ணி வச்சார். அவர் உடனே என்னம்மா விஜய்குமாருக்கு தான் மகளா நடிப்பியா என் கூட நடிக்க மாட்டியான்னு கேட்டார். நான் அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டேன். அப்புறம் அவர் நான் ஒருநாள் கூப்பிட்டு அனுப்புறேன்னு சொல்லிட்டு போய்ட்டார்.




அப்புறம் கொஞ்ச மாசம் கழிச்சி என் அப்பா பேஜருக்கு ஒரு மெசேஜ் வருது. அதுல அருணாச்சல் சினி க்ரியேஷன்ஸ் ஆஃபீஸுக்கு வரவும்னு இருந்தது. நாங்க நம்பவே இல்லை அங்க போனோம். அங்க கே.எஸ்.ரவிக்குமார் சார் இருந்தார். என்னை சேலை கட்டிட்டு வரச் சொல்லியிருந்தாங்க. நான் பார்க்க ரொம்ப சின்னப் பொண்ணா இருந்தததால என்ன வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ப்ரீதா மேம் புக் ஆனாங்க. ஆனா ரஜினி சார்கிட்ட சொன்னபோது அவர் ஃபீல் பண்ணியிருக்கிறார். இல்லை நான் அந்த்ப் பொண்ணுக்கு வாக்கு கொடுத்துட்டேன். எனக்கு ரெண்டு பொண்ணு மாதிரிய கதையை மாத்திக்கோங்க என்று சொல்லியுள்ளார். அப்படித்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்புறம் செட்டிலும் எனக்கு ஏக மரியாதை தான். புரொடக்‌ஷன்ல கூப்பிட்டு இந்தப் பொண்ணு எனக்கு மகளா நடிக்கிறார். எனக்கு இவர் மகள் மாதிரி தான். அதனால் எனக்கு என்ன மரியாதை கொடுப்பீங்களோ அதை இந்தப் பொண்ணுக்கும் கொடுங்க என்று சொல்லிட்டார். ஐய்யோ எனக்கு செட்டில் தடபுடலா கவனிப்பு இருக்கும். ஜூஸ் என்ன ஐஸ்க்ரீம் என்ன குடை என்ன..இதெல்லாம் அனுப்பிக்கலாமா வேணாமான்னு யோசிப்பேன். அந்த அளவுக்கு மரியாதை.


அப்புறம் ஒருநாள் செட்டில் என்ன ரஜினி சார் கூப்பிட்டார். நீ நல்லா பாடுவியாமே எனக்கு ஒரு பாட்டு பாடு என்றார். நான் உடனே ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலைப் பாடினேன். பாடிக் கொண்டிருக்கும் போதே செட்டுக்குள் ஒரு கேக் வந்தது. அன்னிக்கு எனக்குப் பிறந்தநாள் அதை தெரிந்து கொண்டு எனக்காக கேக் வாங்கி வந்திருந்தார். அதை நான் அங்கு கட் பண்ணேன். அப்புறம் என் அம்மாவைக் கூப்பிட்டு ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தைக்கு என்னமாவது வாங்கிக் கொடுங்க என்று கொடுத்தார்.


அதெல்லாம் என்றைக்குமே மறக்க முடியாது.


இவ்வாறு அனிதா வெங்கட் கூறினார்.