மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் சென்னை திரும்பினார்.
முன்னதாக கடந்த 19-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பேரன்களும் சென்றனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை முடித்த நிலையில் அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார்.
முதன்முதலில், கடந்த 2011ம் ஆண்டு தான் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சற்று கவலைதரும் வகையில் பாதிக்கப்பட்டது. அப்போது அவர் சென்னை போரூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு அவருக்கு உறுதியானது. சிலகாலம் அங்கேயே தங்கியிருந்தார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அம்மருத்துவமனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதால் பல்வேறு வதந்திகளும் பரவின. இதனால், மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டார்.
சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் இயல்பாகவே இருந்துவந்த அவருக்கு மீண்டும் 2016ல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு அவரது இளைய மகள் செளந்தர்யா சிறுநீரகம் தானமாகக் கொடுத்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் இருக்கின்றன.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளச் செல்லவில்லை.
இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரஜினிகாந்த் கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் பிரபல மாயோ கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். சோதனைகளை முடித்துக் கொண்டு இன்று அவர் ஊர் திரும்பியுள்ளார்.
ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் அண்ணாத்த வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியானதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் அவர் நலமுடன் ஊர் திரும்பியுள்ளது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர்கள் பலர் உள்ளதால் இதுவொரு சூப்பர் ஸ்டாரின் மல்ட்டி ஸ்டாரர் திரைப்படம் என்ற புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இரண்டு நாள் ஷூட்டிங்:
ரஜினி சென்னை வந்துள்ள நிலையில் இரண்டு நாள்கள் 'அண்ணாத்த' படத்தின் பேட்ச் வொர்க் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ஆர்ஏபுரத்தின் பெலிசியா டவர்ஸில் இதற்கான செட் போடப்பட்டுள்ளது. அதன்பின்னர் ரஜினி அடுத்த படம் குறித்து ஆலோசிப்பார் என்றும் ரஜினியின் அடுத்தப்படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.