இயக்குனர் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம், சினிமாவில் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆன கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்தி வந்தார். இதோடு மட்டுமல்லாது, சின்னத்திரை நாடகங்களுக்கும் வசனம் எழுதி வந்தார். 30 நாடகங்கள், 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இஞ்ஜினியரிங் பட்டதாரியான கிரேசி மோகன், கிண்டி இஞ்ஜினியரிங் கல்லூரியில், 1972ம் ஆண்டு நடந்த கல்லூரிகளுக்கிடையேயான நாடக போட்டியில், இவரின் வசனத்திலான கிரேட் பேங்க் ரோப்பரி நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதை, நடிகர் கமல்ஹாசனிடமிருந்து கிரேசி மோகன் அப்போது பெற்றார். இவரது வசனத்திலான 30க்கும் மேற்பட்ட நாடகங்கள், இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் 6,500க்கும் மேற்பட்ட முறை மக்களுக்காக நடத்தப்பட்டுள்ளன. இவரின் படைப்பான சாக்லேட் கிருஷ்ணா, நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளது. இவரது கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professional excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
இவர் கல்யாணமாலை நிகழ்ச்சிகளில் பட்டிமன்றம் நடத்தி வந்தார். அந்த சமயத்தில் ரஜினியும் கமலும் அவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறி இரு ஸ்வாரஸ்யாமன் சம்பவங்களையும் எடுத்து கூறி இருக்கிறார். "ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் வேலை செய்யும் அனுபவம் கிடைத்தது, அற்புதமான மனுஷன். எனக்கு வெற்றிலை, சீவல், பாக்கு போட்ற பழக்கம் உண்டு, நான் எப்போவுமே கூட வச்சிருப்பேன். அவர் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கும், பாத்ரூம் பளபளன்னு இருக்கும், வெற்றிலை சீவல் பாக்கு போட்டா எங்க துப்புறதுன்னு 3 நாளா போடவே இல்ல. எழுத எழுத போர் அடிக்குது, என்னடா இப்படி கஷ்டப்பட்டு ஒரு படத்துல வேலை பாக்கணுமான்னு ஆயிடுச்சு. 3 வது நாள் அவரே கேட்டாரு, என்ன பைலன்னு. வெற்றிலை சீவல் பாக்குன்னு சொன்னேன். போடவேண்டியது தானேன்னு சொன்னார். வேண்டாம் சார் எங்க சார் துப்புறதுன்னு விட்டுட்டேன்னு சொன்னேன். அட இங்க கொடுங்க நான் போடுறேன்னு அவரும் போட்டு எனக்கும் கொடுத்தார். ரெண்டு பேருமா போயி அவர் வீட்டு பாத்ரூம்ல துப்பினோம். அது மாதிரி நம்ம வீட்டுக்கு வர்றவங்ககிட்ட காபி சாப்புறீங்களான்னு கேக்க கூடாது. என்ன சாப்புறீங்கன்னு கேக்கணும். மத்தவங்களுக்கு என்ன வேணும்னு அதை தெரிஞ்சு பண்றதுதான் ராஜினியோட ஆன்மிகம்." என்றார்.
நடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார். அவரை பற்றி பேசுகையில், "கடவுள் பாதி மிருகம் பாதி என்றார் கமல்ஹாசன், நான் அவரை சிவாஜி பாதி, நாகேஷ் பாதி என்பேன். அவருக்குள் இருக்கும் நாகேஷ்தான் என்னையும் அவரையும் இணைத்தது. எனக்காகத்தான் அவர் அத்தனை காமெடிப் படங்கள் செய்தார். எங்கள் இருவருக்குமான தொப்புள்கொடி ஹ்யூமர். என் அறுவதாம் கல்யாணத்திற்கு கமல் வருவதாக கூறி இருந்தார். முகூர்த்த நேரம் வந்தது, சார் தாலி கட்டனும் சார்னு ஐயர் சொல்றாரு. இல்ல கமல் வரல இன்னும்னு சொன்னேன். சார் கமல் வர்றாரு வரல, ஆனா நல்ல நேரம் நிக்காதுல்ல சார்ன்னார். 60 வயசு வரைக்கும் என் பொண்டாட்டி என் கூட இருந்துட்டா, இனிமே நல்ல நேரம் கடந்துட்டா ஒன்னும் ஓடி போய்ட மாட்டா, கமல் வரட்டும்னு சொன்னேன். கமல் நேரத்துக்குள்ள வந்துட்டார். வந்ததும்தான் தாலி கட்டினேன்." என்று கூறினார்.