பெங்களூருவில் ஒருவர் ஐஸ்வர்யா ராய்க்கு நீங்க ஹீரோவா என்று கேட்ட தருணத்தை அனைவரும் ரசிக்கும்படி காமெடியாக கூறிய விடியோ ஒன்று வைரலாக சுற்றி வருகிறது.
ரஜினிகாந்தின் எல்லா திரைப்படங்களிலுமே ரஜினியின் ஹ்யூமர் நன்றாக எடுபடும். தில்லு முல்லு போன்ற முழு நீள காமெடி படங்களிலும் அவர் நடித்ததுண்டு. அதுமட்டுமின்றி தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன் போன்ற படங்களில் அவருடைய காமெடி சீன்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காத வகையில் இருக்கும். அதுமட்டுமின்றி அவருடன் நெருங்கி பழகிய பலரும், அவர் ஒரு ஜாலியான மனிதர் என்று கூறி இருக்கின்றனர். அவர் செட்டிலும் இது போன்று ஹ்யூமர்களை அவிழ்த்து விடுவார் என்று பலர் கூற கேட்டிருப்போம். ஆனால் அதனை வெளியில் மக்கள், ரசிகர்கள் பெரிதாக கண்டதில்லை. அதில் ஒரு ரேர் நிகழ்வு அவருக்கு நிகழ்ந்த விஷயத்தை கதையாக அவரே கூற அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், ஓரளவுக்கு ஓடி வசூல் செய்திருந்தது. இதையடுத்து ரஜினியை அவர் இயக்குவார், இவர் இயக்குவார் என்று அவ்வப்போது ஏதாவது பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைப்பார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி சுமாரான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட ஷூட்டிங் துவங்கி விட்ட நிலையில் ரஜினிகாந்த் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரியங்கா அருள்மோகன் ரஜினியின் மகளாக நடிக்கிறாராம். முன்னதாக நயன்தாரா தான் ஹீரோயின் என்று பேச்சு கிளம்பியது. நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம் என்றார்கள் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராயின் பெயர் அடிபடுகிறது. முன்னதாக ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால், மும்பையில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்வில் பேசிய ரஜினி,"என் கூட நடிக்க சம்மதிச்ச ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் ஒரு நாள் என் சகோதரர் வீட்டுக்கு பெங்களூரு போயிருந்தேன். அங்க பக்கத்து வீட்டுல தங்கி இருந்த ஒரு ராஜஸ்தான் காரர் நான் வந்திருக்கிறது தெரிஞ்சு என்ன பாக்க வந்திருந்தார். அவருக்கு ஒரு 60 வயசுக்கு மேல இருக்கும். அவர் என்னை பார்த்ததும் ஹாய் ரஜினி எப்படி இருக்கீங்க என்றார், நான் நல்லாருக்கேன் என்றேன். உங்க முடிக்கெல்லாம் என்னாச்சு, காணோம் என்று கேட்டார்." எனக்கூறி ஒரு சிறிய இடைவெளி விட, கூடியிருந்தவர்கள் சிரித்தனர். மேலும் தொடர்ந்த அவர், "இல்ல அதெல்லாம் கொட்டிபோச்சு, அதை விடுங்க என்றேன். ஒ சினிமாவிலிருந்தெல்லாம் ஓய்வு பெற்றாச்சா… ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருக்கீங்க போல என்று கேட்டார். நான் உடனே, இல்ல நான் ஒரு படம் பண்ணிட்ருக்கேன் என்றேன். ஓ என்ன படம் என்று கேட்டார். நான் ரோபோட் என்றேன். ஒ அப்படியா நல்லது நல்லது என்றார். பின்னர் நான் அவரிடம் கூறினேன், ஐஸ்வர்யா ராய் ஹீரோயின் என்று. ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா, அருமை, அருமை, நல்ல விஷயம், ரொம்ப நல்ல நடிகை… ஆமாம் யார் ஹீரோ? என்றார்." என ரஜினி கூற அரங்கமே அதிர சிரிப்பலை கேட்டது. அதிலும் குறிப்பாக அமிதாப் பச்சன் விழுந்து விழுந்து சிரித்தார்.
தொடர்ந்த ரஜினி, "நான்தான் ஹீரோ என்றேன், நீங்களா ஹீரோ என்று ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் அவருடைய குழந்தையுடன் வந்திருந்தார். அந்த குழந்தை, 'டாடி அவர் ஹீரோ' என்று மெதுவாக சொல்லி புரிய வைக்கிறது. ஆனால் அதன் பிறகு அவர் அங்கு ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பார், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. என்னை முறைத்து பார்த்தபடிக்கு அமர்ந்திருந்தர். பின்னர் எழுந்து சென்றதும் வெளியில் இருந்து பெரிய சத்தம், என்ன ஆச்சு இந்த ஐஸ்வர்யா ராய்க்கு… என்று. சிறிது நேரம் கழித்து என்ன ஆச்சு அபிஷேக் பச்சனுக்கு? என்ன ஆச்சு அமிதாப் பச்சனுக்கு? அவராவது சொல்லக்கூடாதா? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு இவன் ஹீரோவா என்றார். மிக்க நன்றி ஐஸ்வர்யா" என்று கூற அரங்கம் அதிர, ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.