Jailer: ஜெயிலர் படம் வெளியான மூன்றே நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை நெருங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சல் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். இதில் ரஜினியைத் தவிர ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், மிர்னா மேனன், தமன்னா, விநாயக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் ஜெயிலரின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் பட்டையைக் கிளப்பி உள்ளன. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று முன் தினம் உலகமெங்கும் ஜெயிலர் படம் ரிலீசானது.
ரிலீசான நாளில் இருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலர் டிக்கெட் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஜெயிலர் படத்தை ஒட்டி வேறெந்த சிறிய பட்ஜெட் படங்கள் கூட திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் படம் ரிலீசான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரிலீசான முதல் நாளில் மட்டும் ரூ.23.4 கோடிகளையும், நேற்று ரூ.16.1 கோடிகளையும் வசூலித்து, இரண்டு நாட்களின் தமிழ்நாட்டில் கலெக்ஷன் ரூ.40 கோடிகளை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது நாளான இன்று விடுமுறை என்பதால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் கலகெஷன் குறித்து தகவல் வெளியிடும் sacnilk தளம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த இணையதளம் பகிர்ந்த தகவலில், ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் கர்நாடகாவில் ரூ.11 கோடிகளையும், ஆந்திராவில் ரூ.12 கோடிகளையும், தமிழ்நாட்டில் ரூ.23 கோடிகளையும், கேரளாவில் ரூ.5.9 கோடிகளையும், மற்ற மாநிலங்களில் ரூ.3 கோடிகளையும் என மொத்தமாக ரூ.56.6 கோடிகள் வசூலித்துள்ளது.
நேற்று கர்நாடகாவில் ரூ.4 கோகளையும், ஆந்திராவில் ரூ.4.5 கோடிகளையும், தமிழ்நாட்டில் ரூ.16.1 கோடிகளையும், கேரளாவில் ரூ.4.8 கோடிகளையும், மற்ற மாநிலங்களில் ரூ.85 லட்சங்களையும் என மொத்தமாக ரூ.30.3 கோடி வசூலாகி உள்ளது.
ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதும் இரண்டே நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் 74.10 கோடிகள் என sacnilk தளம் தெரிவித்துள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்து 104 கோடிகளைக் கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக உலகம் முழுவதுமான கலெக்ஷன் 143 கோடிகளை ஜெயிலர் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 150 கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் வசூல், இன்று தொடங்கி ஞாயிறு, சுதந்திர தினம் என அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் பாக்ஸ் ஆபிசில் விரைவில் ரூ.200 கோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதுவரை சன் பிச்சர்ஸ் தரப்பில் இருந்து பாக்ஸ் ஆஃபிஸ் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.