அண்ணாத்த வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை என்பதாலும் விமர்சன ரீதியாக சோபிக்காததாலும் ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்திற்கான சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவா இயக்கியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று தான் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஓரளவுக்கு வசூலும் கூட ஆகியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், விமர்சன ரீதியாக படம் சிறிதும் தேறவில்லை. பச்சப்புள்ளை கூட படத்தை கழுவிக் கழுவி ஊத்தியது தான் மிச்சம். தீபாவளிக் கொண்டாட்டம், வெகு நாட்களுக்குப் பின் திரையரங்குக்கு கூட்டம் கூட்டமாக செல்ல வாய்ப்பு என்பதாலே அண்ணாத்த தேறியது என்றெல்லாம் கணிப்புகள் வெளியாகின.
மேலும், அண்ணாத்த ரிலீஸுக்கு முன்னால் ரஜினிகாந்த் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுவும் அண்ணாத்த மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனாலும் கூட்டம் கூட்டமாக ரஜினியின் அண்ணாத்த படத்தைப் பார்க்கச் சென்றனர்.
தொடர்ச்சியாக தீபாவளிப் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் திரையரங்குகளில் கூட்டம் சேர்ந்தது.
முதல் ஐந்து நாள் வசூல் பலே!
முதல் ஐந்து நாளில் அண்ணாத்த வசூல் ரூ.157 கோடியைத் தாண்டியது. வசூல் விவரம் பின்வருமாறு:
Day 1 - ₹ 39.50 cr
Day 2 - ₹ 37.26 cr
Day 3 - ₹ 39.92 cr
Day 4 - ₹ 21.89 cr
Day 5 - ₹ 19.13 cr
Total - ₹ 157.70 cr
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படம் பெரியளவில் வசூலில் சொதப்பியதால் ரஜினி தனது சம்பளத்தை அடுத்த படத்திற்கு குறைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி தனது அடுத்த படத்திற்கு ரூ 30 கோடி அளவிலான சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ரஜினி எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறித்து எந்தஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
அண்ணாத்த கதை பழைய அண்ணன் தங்கை சென்டிமென்ட் என்பது ரசிகர்களுக்குப் பிரச்சினையில்லை. அது சொல்லப்பட்ட விதம் தான் பிரச்சினை. ஒரு மெகா சீரியலில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என டாப் க்ளாஸ் நடிகர்களை வைத்துப் பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். அனைத்துத் திரை விமர்சனங்களும் அதை நோக்கியே இருந்தன.