சர்ச்சையில் சிக்கிய விஷ்ணுவர்தன்

ரஜினியின் பில்லா திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன்  நடித்த டான் படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவான பில்லா படத்தில்  1980 ஆம் ஆண்டு ரஜினி நடித்தார். சுரேஷ் பாலாஜி இப்படத்தை தயாரித்தார். ரஜினியின் கரியரில் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்து வெள்ளி விழா கண்ட படம் பில்லா. 

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் வைத்து  பில்லா படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன். பில்லா படத்தில் அஜித் நடிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்தன. ஆனால் முந்தைய இரண்டு படங்களைக் காட்டிலும் இந்த படத்திற்கு தனது ஸ்டைலால் தனித்துவமான லுக்கை கொடுத்தார்கள் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன். அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் பில்லா படம் குறிப்பிடத் தகுந்தது. இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவர்தன் பேசியுள்ள கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பில்லா ஓடவில்லையா ?

ரஜினியின் பில்லா படம் பெரியளவில் ஓடவில்லை. இந்த படத்தை நாம் எப்படி எடுக்கப் போகிறோம் என நான் ரொம்ப யோசித்தேன்" என விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். ரஜினியின் பில்லா படம் வெள்ளி விழா கண்டது கூட தெரியாமல் விஷ்ணு வர்தன் தவறாக பேசிவிட்டார் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் பில்லா படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியின் நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நேர்காணலில் பில்லா திரைப்படம் உருவான பின்னணியைப் பற்றி சுரேஷ் பாலாஜி இப்படி கூறியுள்ளார். " அஜித் தான் என்னிடம் நான் படம் பண்ண சொன்னார். எனக்கு ஏ.வி.எம் சரவணன் நல்ல பழக்கம் என்பதால் பில்லா படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவு செய்தோம். விஷ்ணுவர்தன் உடன் அஜித் ஏற்கனவே இணைந்து பணியாற்றியிருப்பதால் அஜித் தான் விஷ்ணுவர்தன் இந்த படத்தை அவர் இயக்கட்டும் என்றார் . தயாரிப்பு நிறுவனத்திற்கு 20 லட்சம் கொடுத்ததுவிட்டு அடுத்தபடியாக ரஜினியிடம் பேசினோம்.

பில்லா படம் பார்த்துவிட்டு ரஜினி முதலில் பாராட்டியது விஷ்ணுவர்தனை தான். அடுத்தபடியாக அஜித்தை பாராட்டினார். படத்தில் பயங்கர ஸ்டைலாக நடித்துள்ளதாக ரஜினி தெரிவித்தார். பில்லா படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று ரஜினி தான் உறுதியாக சொன்னார்"