பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான லியோ ட்ரெய்லரை பார்த்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கொந்தளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடலான “நா ரெடி” பாடலும் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இப்பாடல் யூட்யூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதிகப்படியான பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு காரணமாக பின்னர் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களை சமாதானப்படுத்த இரண்டாவது பாடலான “பேட் தாஸ்” கடந்த வாரம் வெளியானது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த படம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு இருப்பதால் வரவேற்பு இருப்பதற்கு மேலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக விஜய் ஒரு இடத்தில் கெட்டவார்த்தை பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தனர்.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது படத்தில் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்ககூடாது என பலரும் தெரிவித்திருந்தனர். படத்தில் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தை மியூட் செய்யப்படும் என்றாலும் இந்த சம்பவத்தை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படியான நிலையில் லியோ ட்ரெய்லரை பார்த்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.