நாடக நடிகர்களாக இருந்து வெள்ளித்திரைக்கு படையெடுத்த ஏராளமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் அவர்  ஜொலிக்க ஆரம்பித்த பிறகும் கூட அவர் மேடை நாடகங்களை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். அவரின் உயிர் நாடியாக நாடகங்கள் இருந்த சமயத்தில் தான் அவருக்கு அலாதியான ஒரு கதாபாத்திரமாக நாடக கலைஞராக  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


ராஜபார்ட் ரங்கதுரை:


அது தான் வி.சி. குகநாதன் தயாரிப்பில் பி. மாதவன் இயக்கத்தில் 1973ம் ஆண்டு வெளியான ' ராஜபார்ட் ரங்கதுரை ' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



நாடக கலைஞனாக சிவாஜி :


நாடகக்காரனாக சிவாஜி கணேசன் நடிக்க ஒரே படத்தில் வள்ளி கல்யாணம், அல்லி அர்ஜுனன் என புராண கதைகளாக இருக்கட்டும் பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற தேச தலைவர்களின் கதைகளாக இருக்கட்டும் தன்னுடைய உயிரை கொடுத்து அவர் நாடகங்களை அரங்கேற்றிய காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினர். அதிலும் ஹாம்லெட் கதாபாத்திரத்தில் ஆங்கிலத்தில் அருவி போல அவர் பொளந்து கட்டிய காட்சிகள் புல்லரிக்க செய்தன. ஆனால் ஹாம்லெட் கேரக்டருக்காக நடிகர் சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுத்தது ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.  


உருக வைக்கும் எக்ஸ்பிரஷன் :


ராஜபார்ட் ரங்கதுரையின் தங்கையாக ஜெயாவும், தம்பியாக ஸ்ரீகாந்தும் நடிக்க ஹீரோயினாக உஷா நந்தினி நடித்திருந்தார். மேலும் வி.கே.ராமசாமி, மனோரமா, சுருளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கண்ணதாசன் வரிகளுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிக்க கூடிய பாடல்கள். அதிலும் ‘அம்மம்மா தம்பி..’, 'ஜிஞ்சினிக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சை கிளி' என்ற பாடல்களின் போது அவரின் எக்ஸ்பிரஷன்களால் பார்வையாளர்களை அவர்கள் அறியாமலே கண்கலங்க வைத்துவிட்டார்.  


 


பாசமிகு அண்ணன் :


பெரும்பாடு பட்டு தம்பியை படிக்கச் வைத்து பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்றும், தங்கையின் திருமணத்திற்காக வரதட்சணை கொடுக்க கடன்வாங்கி கடனாளியாக நிற்கும் இடங்களிலும் நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டார் நடிகர் திலகம். பாசமிகு அண்ணனாக போராடும் போதும், கூட மேடையில் ஏறி மக்களை மகிழ்விக்கும் போதிலும் உருக வைத்துவிட்டார். 


வெற்றிவிழா கண்ட ரீ ரிலீஸ் :


200 திரையரங்குகளில் திரையிடப்பட்ட 'ராஜபார்ட் ரங்கதுரை' ,100 நாட்களையும் கடந்து ஓடி சாதனை படைத்தது. 2017ம் ஆண்டு டிஜிட்டலில் மேம்படுத்தி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மதுரை மீனாட்சி திரையரங்கில் வெளியானது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படமும் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது.  


50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகளைக் கடந்தாலும் கம்பீரமாக ராஜபார்ட் ரங்கதுரையாக ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பார்.