இயக்குநர் ராஜகுமாரன் பேசிய போது, `நடிகர் விக்ரமிற்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சரத்குமாருக்கும், நமது தயாரிப்பு நிறுவனத்திற்கும் தான் பிரச்னை இருந்தது. விக்ரம் நன்றாக ஒத்துழைத்தார்.. அந்தப் படத்தில் நன்றாகத் தான் இருந்தார். விக்ரம் அதிக நாள்கள் பணியாற்றியதால், சம்பளம் கூடுதலாக எதிர்பார்த்தார். ஆனால் நாங்கள் பணியாற்றிய அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவ்வளவு சம்பளத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. அதனால் அவருக்குப் பிரச்னையாக இருக்கலாம். எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு, ஒரு நேர்காணலில் விக்ரம், `ஐ ஹேட் திஸ் ஃப்லிம்’ எனக் கூறியிருந்தார்.  அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.



தொடர்ந்து அவர், `ஒரு உண்மையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். விஜய் எத்தனை படம் நடித்திருந்தாலும், `பூவே உனக்காக’ படம் தந்த பிளாட்ஃபார்மில் தான் அவர் சென்று கொண்டிருக்கிறார். அதனை மறந்துவிட முடியாது. அதுதான் அவரைக் குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்த்தது. `சேது’ படம் தான் நடிகர் விக்ரமிற்குக் கரியர் அமைத்துக் கொடுத்தது என நினைக்கிறார்கள். விக்ரம் என்ற நடிகரை வெளிக்கொண்டு வந்தது வேண்டுமானால் `சேது’ படமாக இருக்கலாம். விக்ரமை ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு சேர்த்தது `விண்ணுக்கும் மண்ணுக்கும்’ திரைப்படம் தான். ஏனெனில் அதுதான் குடும்பத் திரைப்படம். `சேது’ படத்தை எந்தக் குடும்பத்தினரும் பார்க்கவில்லை.


சில ரசிகர்களும், சில பத்திரிகைகளும் அந்தப் படத்தைக் கொண்டாடலாம். அதனால் அதை குடும்பங்கள் நிச்சயமாக பார்க்கப் போவதில்லை. ஆனால் சரத்குமார், தேவையானி, குஷ்பு போன்ற மிகப்பெரிய ஸ்டார்கள் இருக்கும் கதையில் விக்ரமிற்கும் ஒரு இடம் தந்து, அழகான பூங்கொத்து போல மக்களிடையே கொண்டு சேர்த்த திரைப்படம் `விண்ணுக்கும் மண்ணுக்கும்’. அந்தப் படம் பெரிதாக போகவில்லை என்று சொல்வார்கள்.. ஆனால் இன்றுவரை கே டிவியில் அதுதான் ஹிட் திரைப்படம். எனது படங்களிலேயே `நீ வருவாய் என’ படத்தைவிட ஹிட் மூவி அதுதான். `சூரிய வம்சம்’ படத்திற்குப் பிறகு, கே டிவியில் அதுதான் ஹிட் திரைப்படம்’ என்றார்.


மேலும் பேசிய இயக்குநர் ராஜகுமாரன், `விக்ரமிற்கு ஏன் அப்படி தோன்றியது எனத் தெரியவில்லை. அவரைப் பெரிதாக நடிக்க விடவில்லை. அவருக்குப் பெரிய கடினமான கதாபாத்திரமும் இல்லை என்று அவர் நினைக்கலாம்.. ஆனால் ஒரு ஹீரோ என்பவர் கையை உடைத்துக் கொண்டு, காலைத் திருப்பிக் கொண்டு, முழியைத் திருகிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. `விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரம் சார் நடித்தது மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரம். அது விக்ரம் போன்றோருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த படங்கள் இங்கே சினிமாவில் செய்யப்படுவதில்லை’ என்று பேசியுள்ளார்.