ஒரு தலை காதல் என்பது எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் பெண்களின் வாழ்க்கையை பதம் பார்க்க தான் செய்கிறது. தொடர்ந்து இது போன்ற கோரமான அவலங்கள் நடைபெற்று தான் வருகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் சமூக ஆர்வலரும், ஆயுர்வேத மருத்துவரும், நடிகையுமான ரேச்சல் ரெபேக்கா சந்தித்த அவலம். தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான அனுபத்தை சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ரேச்சல் ரெபேக்காவை குட் நைட், கடைசி விவசாயி, லக்கி மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமாக இருக்கலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பலரும் ரேச்சல் ரெபேக்காவை பலவோ செய்பவர்களாக இருப்பார்கள். மிகவும் எதார்த்தமான அவரது முகம் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு நபரை போல இருப்பதால் எளிதில் அவர் ரசிகர்களுடன் கனெக்ட்டாகி விடுவார்.
தற்போது அவர் மிகவும் பிரபலமான ஒரு பர்சனாலிடியாக இருந்தாலும் அவரின் இளம் பருவம் சவாலாகவே இருந்துள்ளது. ஒரு தலை காதலால் அவர் அனுபவித்த மிகவும் மோசமான அனுபவம் பற்றி கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த ரேச்சல் ரெபேக்கா, 2008ம் ஆண்டில் கல்லூரியில் படித்து வந்த காலகட்டத்தில் ஒருவன் அவரை காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்துள்ளான். விருப்பமில்லை என எத்தனை முறை ரேச்சல் மறுத்தாலும் விடாமல் டார்ச்சர் செய்து வந்தவன் ஒரு நாள் ரேச்சலின் வீட்டுக்கு சென்று அவரின் போனை பிடுங்கி கொண்டு சென்றுள்ளான். போன் வேண்டும் என்றால் அவன் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என சொல்லி ஓடி சென்றுள்ளான். அவனுடைய டார்ச்சர் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முடிவு எடுத்துள்ளார் ரேச்சல்.
அப்பாவிடம் இதை பற்றி சொல்லவும் அவர் ரேச்சலுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். பின்னர் அன்றே ரேச்சலின் தந்தை வீட்டில் இல்லாத போது வீட்டுக்கு வந்த அந்த கொடூரன் ரேச்சலையும் அவரின் அம்மாவையும் துருப்பிடித்த கத்தியால் வெட்டி விட்டு ஓடிச்சென்றுள்ளான். ரேச்சல் மீது மட்டும் 16 இடத்தில் வெட்டியுள்ளான். அதில் அவருடைய குடலே வெட்டப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் இருந்த ரேச்சல் ரெபேக்காவை அக்கம் பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால் பலரும் எனக்கு ரத்தம் கொடுத்து என்னை காப்பாற்றினார்கள். அதற்கு பிறகு தான் பலருக்கும் உதவி செய்ய வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும் என இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என ரேச்சல் ரெபேக்கா அந்த நேர்காணலில் பேசி இருந்தார்.
ரேச்சல் ரெபேக்காவின் இந்த துணிச்சலான பேச்சு வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இருந்தது.