ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானப் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், சஞ்சனா நடராஜன்,  நவீன் சந்திரா, இளவரசு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து   ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வசூலை குவித்து வரும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நவீன் சந்திரா  மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அல்லியஸ் சீஸராக நடித்த ராகவா லாரண்ஸ் பேசினார்.


இது வேற ராகவா லாரண்ஸ்


”இந்த மேடை எனக்கு மிக முக்கியமான ஒரு மேடை. நானே இயக்கி நானே நடித்த காஞ்சனா படத்தை இயக்கி அது மிகப்பெரிய வசூல் எடுத்தது.  ஆனால் பிற இயக்குநர்களின் இயக்கத்தில்  நடிக்க வேண்டும் என்று என்னுடைய மனது நீண்ட நாடகளாக சொல்லிக் கொண்டிருந்தது. ஜிகர்தண்டா முதல் பாகத்தை நான் மிஸ் செய்துவிட்டேன். இரண்டாவது பாகத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று நான் கார்த்திக் சுப்பராஜிடன் நீண்ட நாட்களாக கேட்டு வந்தேன். இப்போது இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதிகம் சந்தோஷப்படுவது நான் தான். இந்தப் படத்தைப் பார்த்து ராகவா லாரண்ஸ் முற்றிலும் வேறு ஒருவராக இருக்கிறார் என்று படம் பார்த்தவர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நான் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ராகவா லாரண்ஸ் பேசினார்


என்னடா இப்டி டார்ச்சர் பன்றாரு


தொடர்ந்து  கார்த்திக் சுப்பராஜைப் பார்த்து “சார் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நீங்கள் உட்கார்ந்துக் கொண்டு காலை ஆட்டிக்கொண்டும் என்னை வேலை வாங்கினீர்கள். எனக்கே நீங்கள் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும்போது என்ன இவர் நம்மளுக்கு பிடிச்ச மாதிரி ஸ்டைலா கூட ஆட முடியலையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இந்தப் படம் வெளியானப் பிறகு சொல்கிறேன் நீங்கள் உட்கார்ந்து மட்டும் இல்ல மெத்தையில்  படுத்துக் கொண்டு காலை ஆட்டிக் கொண்டே படம் எடுக்கலாம். அடுத்தப் படம் எடுக்கும்போது சொல்லுங்கள். நானே மெத்தையை வாங்கிக் கொண்டு வருகிறேன் “ என்று நகைச்சுவையாக பேசினார்.


ரசிகர்களுக்கு திருமண மண்டபம்


பிறகு தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய ராகவா லாரண்ஸ் “ரசிகர்கள் என்னைப் பார்க்க வரும்போது நீங்கள் உங்கள் பணத்தை செலவு செய்து என்னை பார்க்க வராதீர்கள். அப்படி வரும்போது விபத்து ஏற்படுகிறது, கடன் வாங்கி துணி வாங்கி என்னைப் பார்க்க வருகிறார்கள். அதனால் தான் என்னைப் பார்க்க வராதீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதை சில ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள். எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த உங்களை நான் ஒவ்வொரு ஊரில் வந்து பார்ப்பது எனக்கு அவ்வளவு சிரமம் இல்லை. ஒரு கல்யாண மண்டபம் புக் செய்து காரில் வரப்போகிறேன்.


பொதுவாக ஒரு படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கினால் அந்த பணத்தை ஏதாவது ஒரு தர்ம காரியத்திற்கு பயன்படுத்துவேன். இந்தப் படத்திற்கு மட்டும் தான் எதுவும் செய்யவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சமீபத்தில் என் ரசிகர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். தன்னுடைய திருமண பத்திரிக்கையை எனக்கு கொடுத்து கல்யாணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறினார். அந்த பத்திரிகையில் மண்டபத்தில் பெயர் இல்லை. கேட்டதற்கு மண்டபம் புக் செய்தவதற்கு தன்னிடம் வசதி இல்லையெனவும் தன்னுடைய நண்பன் அச்சு ஊடகத்தில் இருப்பதால் பத்திரிகை இலவசமாக அடித்துக் கொடுத்தார் என்றும் கூறினார். அப்போதே நான் முடிவு செயதுவிட்டேன் என்னுடைய அம்மாவின் பெயரில் ஒரு திருமண மண்டபம் ஒன்றை கட்டப் போகிறேன். என்னுடைய ரசிகர்கள் அதில் இலவசமாக திருமணம் செய்துகொள்ளலாம்.” என்று ராகவால் லாரன்ஸ் கூறினார்.