நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் திட்டமிடப்பட்டுள்ள `அதிகாரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ள இந்தக் கதையை, இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் எஸ். கதிரேசன் இயக்கத்தில் `ருத்ரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்.கதிரேசன் தயாரிப்பில் அடுத்த திரைப்படமாக, இயக்குநர் வெற்றிமாறனின் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்க, துரை செந்தில் குமார் இயக்குவதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தத் திரைப்படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று `அதிகாரம்’ படக்குழுவினரான நடிகர் ராகவா லாரன்ஸ், படத்தின் கதையாசிரியரான இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் துரை செந்தில் குமார், தயாரிப்பாளர் எஸ்.குமரேசன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
``பொல்லாதவன்’, `ஆடுகளம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, நானும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியுள்ளோம். எனினும், சமீபத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. வெற்றிமாறன் என்னிடம் படத்தின் கதைச் சுருக்கத்தைக் கூறினார். அது எனக்கு பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இது ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது’ என `அதிகாரம்’ படத்தின் அறிவிப்பு வெளியான போது கூறியிருந்தார் தயாரிப்பாளர் எஸ்.குமரேசன்.
மேலும், அவர், `இந்தத் திரைப்படத்தை நாங்கள் பான் இந்தியத் திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது’ எனவும் கூறியிருந்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் தன் இயக்கத்தில் `விடுதலை’, `வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி வருவதால், அவரது உதவி இயக்குநராக இருந்து, `எதிர்நீச்சல்’, `கொடி’, `காக்கிச் சட்டை’ முதலான திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்தத் திரைப்படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.