தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல நடன இயக்குனருமானவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் முனி. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் கடந்த 2011ம் ஆண்டு முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா படத்தை எடுத்தார்.

காஞ்சனா 4:


த்ரில்லர் பேய் படமான இந்த படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார்.  காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களையும் அவர் இயக்கினார். அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், காஞ்சனா 4 என்ற படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் ராகவா லாரன்சே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.


நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் 1999ம் ஆண்டு முதன் முதலில் ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார். பின்னர், தமிழில் அஜித்தின் அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா பாடலுக்கு நடனம் ஆடி பிரபலம் ஆனார். பின்னர், அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது. அற்புதம் படத்தில் நாயகனாக அறிமுகமான ராகவா லாரன்ஸ்க்கு முனி படம் தந்த வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.


அடுத்தாண்டு ரிலீஸ்:


பின்னர், பாண்டி, ராஜாதி ராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா வரிசை படங்கள், சிவலிங்கா, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்து மேலும் பிரபலமான நடிகராக உள்ளார். தற்போது பென்ஸ் என்ற படத்தில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் LCU வரிசை படங்களில் முக்கிய வில்லனாக பென்ஸ் கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சனா படத்தை மீண்டும் ராகவா லாரன்ஸ் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த படத்தை கோடை விருந்தாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காஞ்சனா 4 பாகத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. காஞ்சனா படம் ராகவா லாரன்ஸ் மட்டுமின்றி சுமன், தேவதர்ஷினி ஆகியோருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும், கோவை சரளாவின் திரை வாழ்வில் மற்றொரு மகுடமாக காஞ்சனா படம் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.