சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
சந்திரமுகி
கடந்த 2005ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்களுள் ஒன்று என்ற பெருமையை இன்றளவும் கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த், பிரபு நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனு சூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு இப்படத்தை தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது.
சந்திரமுகி 2
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு தான் இப்படத்தை இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இதனிடையில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டது.
புதிய ட்ரெய்லர்
இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில் சந்திரமுகி படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.
சந்திரமுகி முதல் பாகத்தில் நடந்த கதையை விவரிக்கிறார் நடிகர் வடிவேலு. அதேபோல் ரஜினியிடம் பேய் இருக்கா இல்லையா என்று கேட்பது போல் இந்த ட்ரெய்லரில் லாரன்ஸிடம் பேய்க்கு முடி கொட்டுமா கொட்டாதா என்று கேட்கிறார். திகிலாக, கலகலப்பாக ஆக்ஷனாக போய்க்கொண்டிருக்கும் ட்ரெய்லரில் கடைசியாக சந்திரமுகியாக கங்கனாவும் வேட்டையனாக ராகவா லாரன்ஸும் வாள் ஏந்தி மோதிக்கொள்ளும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குடும்பங்களுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய முழுமையான ஒரு படமாக இந்த படம் இருக்கும் என்கிற உத்தரவாதத்தை சந்திரமுகி 2 ட்ரெய்லர் காட்டுகிறது. சந்திரமுகி படத்தைப் பொறுத்தவரை வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் பார்க்கிங் உள்ளிட்ட படங்கள் அதே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் சந்திரமுகி 2 படத்திற்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.