சந்திரமுகி 2 படத்துக்காக ஜிம்மே கதியென கிடந்து கட்டுக்கோப்பான உடலை கொண்டு வந்திருக்கிறார் நடிகர் லாரன்ஸ். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.


நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். 






2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.  மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் ஷெட்யூலும் முடிந்துவிட்டதாக ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்துக்காக ஜிம்மே கதியென கிடந்து கட்டுக்கோப்பான உடலை கொண்டு வந்திருக்கிறார் நடிகர் லாரன்ஸ். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 


அதுமட்டுமின்றி மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் லாரன்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். லாரன்ஸின் ரசிகர்கள் பலரும் அந்த தொண்டு நிறுவனத்துக்கு தொடர்ந்து நிதி அளித்தும் வருகின்றனர். அது குறித்தும் குறிப்பிட்டுள்ள லாரன்ஸ், ''என்னுடைய தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி அளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தேவையானபோது உங்களிடம் நான் உதவி கேட்கிறேன். நான் நல்ல நிலையில் இருக்கிறேன். பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். மக்களுக்கான சேவையை என்னுடைய பணத்திலேயே செய்ய முடியும் என நினைக்கிறேன். நண்பர்கள் யாரும் என்னுடைய தொண்டு நிறுவனத்துக்கு பணம் அனுப்ப வேண்டாம். உங்களுடைய வாழ்த்துகளே போதும். இத்தனை ஆண்டுகள் உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விரைவில் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.






தொண்டு நிறுவனத்துக்கு பணம் வேண்டாம் எனப்பதிவிட்டுள்ள லாரன்ஸுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சந்திரமுகி 2 திரைப்படம் வெற்றியடையும் வாழ்த்துகளை குறிப்பிட்டுள்ளனர்