நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். தனது தனித்துமான நடனத்தால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இவர் ஒரு டான்சர் மட்டுமின்றி, சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவை அனைத்தையும் மீறி அவரை பலரும் போற்றுவதற்கு முக்கியமான காரணம் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானமுள்ள மனிதர். இந்த மாமனிதன் இன்று தனது 46வது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹேப்பி பர்த்டே மாஸ்டர் !!!


 



நடனத்தின் மூலம் முன்னேறிய கலைஞன் :


ஒரு நடன ஆசிரியராக ரஜினிகாந்த் முதல் விஜய் வரையிலும் சிரஞ்சீவி முதல் நாகார்ஜூனா வரையிலும் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பைட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனின் உதவியாளராக தனது திரை வாழ்வை தொடங்கிய ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக வெற்றி பெற்று தற்போது இயக்குனராகவும் முன்னேறி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவரின் நடிப்பு திறமையை பார்த்து அசந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான், இவரை ஒரு நடன குழுவில் சேர்த்துவிட்டு வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்.  


 






 


சிறந்த மனிதனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :


திரைவாழ்க்கையில் சிறப்பாக இருக்கும் ராகவா லாரன்ஸ் பல ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது சொந்த அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். உயிருக்கு போராடி வரும் பல குழந்தைகளை காப்பாற்றி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் டான்ஸ் கற்றுக் கொடுத்து அவர்களை ஒரு முன்னோடிகளாக திகழ வைத்துள்ளார். இந்த மனிதம் தான் அவரை இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. ரீல் ஹீரோவாக மட்டுமே இருந்து விடாமல் ரியல் ஹீரோவாகவும் நமக்கு மத்தியில் வாழும் இந்த கலைஞனுக்கு பிரபலங்களும் பலரும் ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறர்கள்.   


 






 


வைகை புயல் வடிவேலுவுடன் சந்திரமுகி 2 : 


தற்போது ராகவா லாரன்ஸ், பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. மேலும் அறிமுக இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ருத்ரன் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே லாரன்ஸ் மாஸ்டர் !!!