நடிகர் ரஜினிகாந்த், தன்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு விஷயத்தை தவறாமல் செய்வார் என நடிகை ராதிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரஜினி - ராதிகா காம்போ
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இதேபோல் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது நடிப்பால் இன்றும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் ராதிகா. இருவரும் இணைந்து போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ரங்கா, ஊர்க்காவலன், மூன்று முகம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா பங்கேற்றார். அப்போது ரஜினியை போல் ஷூட்டிங்கில் நீங்கள் பேசிக்காட்டுவீர்கள் என சொன்னார்கள். அதேபோல் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் உண்டு. அதைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த பயம் இருக்கணும்
அதற்கு பதிலளித்த ராதிகா, “நான் ரஜினியுடன் முதன்முதலாக போக்கிரி ராஜா படத்தில் தான் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பில் ரொம்ப அமைதியாக இருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் முதுகின் மேல் ஏறி ஆட வேண்டும். புலியூர் சரோஜா தான் நடனம் அமைத்தார். முதுகில் டைவ் அடித்து உட்கார வேண்டுமென்பதால் சரியாக செய்யவில்லை என்றால் ரஜினி தன்னுடைய நடன அசைவை செய்ய முடியாது. ஷூட் செய்யும் போது ரஜினி எதுவுமே பேசவில்லை. ஆனால் எல்லா முடிந்து சாயங்காலம் வந்து அப்படியே ‘என்னால முடியல’ என படுத்தே விட்டார்.
ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும்போது ரப்பர் செருப்புடன் வந்திருந்தார். நான் அவரை அப்படியே பார்த்து விட்டு, ‘பெரிய நடிகர் தானே..சூப்பர் ஸ்டாருன்னு சொல்றாங்க’ என கேட்டேன். அவர் என்னவென்று விசாரிக்க, ‘என்னது இது செருப்பு’ என கூறினேன். அந்த நிகழ்வில் இருந்து எங்கே என்னை பார்த்தாலும் முதலில் குனிந்து அவர் காலை பார்த்து கொள்வார். சரியான காலணி அணிந்திருக்கிறாரா என செக் செய்வார். அந்த பயம் எப்பவும் இருக்கணும் சொல்வேன். அவர் மிகவும் சிறந்த மனிதர்.
நாங்கள் இருவரும் ஏவிஎம் தயாரிப்பில் தான் நடித்தோம்.அங்கே தமிழ் உச்சரிப்பு என்பது சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக ரஜினி டப்பிங் பேசும் போது சென்று விட்டால் அவருடன் ஒப்பிடும்போது என் தமிழ் தூய தமிழாக மாறிவிடும்” என ரஜினியுடன் பல நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
அடுத்தடுத்து வெளியாகவுள்ள ரஜினி படங்கள்
நடப்பாண்டில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும் 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கத்திலும், 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி அடுத்தடுத்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.