ரஜினி அங்கிள்... என க்யூட்டாக அழைத்த அந்த சிறுமி பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவையே தனது கண்ணுக்குள் அடக்கிவிடுவாள் என யாருமே நினைக்கவில்லை. 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அமுல் பேபி மீனா என்றாலும் அனைவரின் கவனத்தையும் ஒரு சிறுமியாக இருக்கும் போதே ஈர்த்தது நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம். அன்று தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் ரஜினிக்கே ஹீரோயினாக நடிக்க கூடும் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இந்த எவர்கிரீன் மீனம்மாவின் 47வது பிறந்தநாள் இன்று!


 



ஹீரோயின் அறிமுகம் :
 
மாற்று திறனாளியாக நடித்து அசத்திய குழந்தை ஒரு சில ஆண்டுகளில் மிகவும் கனமாக கதாபத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதுவும் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து ஹீரோவான கம்பீரமான நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக என்பது மலைப்பாக இருந்தது. கஸ்தூரி ராஜாவின் இயக்கம், நடிகர் ராஜ்கிரணின் முரட்டுத்தனமான நடிப்பு, இளையராஜாவின் இசை என அனைத்தையும் தாண்டி நடிகை மீனாவின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அப்படம் தான் 1991ம் ஆண்டு வெளியான வெற்றிவிழா திரைப்படமான 'என் ராசாவின் மனசிலே'. 


சூப்பர் ஸ்டார் ஜோடியாக :


அடுத்தடுத்து வாய்ப்புகள் மீனாவை தேடி சாரைசாரையாக வந்து குவித்தாலும் படங்களை அவர் தேர்வு செய்யும் விதமே அவரின் வெற்றியை நிலைநாட்டியது. அழகாகவும், இன்னசன்ட்டாகவும், யதார்த்தமாகவும் கொஞ்சி கொஞ்சி நடிப்பதில் மீனாவை அடித்து கொள்ள ஆளே இல்லை. எஜமான், முத்து, வீரா படங்களில் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்த மீனா அவருக்கே டஃப் கொடுத்து நடித்திருந்தார். 


 



டாப் ஹீரோ :


அடக்கமான ஒரு கதாநாயகியாகவே ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவரான மீனா அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசபடுத்தினார். கமலுடன் அவ்வை சண்முகி, சரத்குமாருடன் நாட்டாமை, கார்த்திக்குடன் அரிச்சந்திரா, ஆனந்தப் பூங்காற்றே, அஜித்துடன் சிட்டிசன், பாக்யராஜ் உடன் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி', பார்த்திபனுடன் 'பாரதி கண்ணம்மா', அர்ஜூனுடன் 'ரிதம்', முரளியுடன் 'பொற்காலம்', சாத்யராஜுடன் 'மாமன் மகள்', பிரபுதேவாவுடன் ' நாம் இருவர் நமக்கு இருவர்', விஜயகாந்துடன் 'வானத்தை போல' இப்படி மீனா நடித்த படங்களை அடுக்கி கொண்டே போகலாம். டாப் ஹீரோ படங்களில் மட்டுமின்றி டாப் இயக்குநர்களின் படங்களிலும் நடித்தவர். 


மீனாவின் பிளஸ் :


நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் சிக்ஸர் அடிக்க உன்னதமான நடிகையான மீனா தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உள்வாங்கி அதை உணர்ந்து வெளிப்படுத்தும் அவரின் வியக்கவைக்கும் நடிப்பு தான் மீனாவின் பலமே. 


எவர்க்ரீன் பியூட்டி:


சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அவரின் அந்த இடத்தை பிடிக்க வேறு எந்த ஒரு நடிகையாலும் முடியவில்லை. இன்றும் அதே க்யூட்னஸ் அதே  இன்னசன்ஸ் கொண்ட மீனா ரசிகர்களின் மனதில் பிடித்த அந்த உன்னதமான இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அப்படியே நிலைத்துள்ளார். இன்றும் மீனா பொண்ணு மீனா பொண்ணு என ரசிகர்களை தான் கைக்குள் அடக்கி வைத்துள்ளார் மீனா.


ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே மீனா !