பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுடன் தான் பணிபுரிந்த அனுபவம் அவ்வளவு சிறப்பானது அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. தன் திரைப்படங்கள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை அதிரடியாய் வலம் வரும் ராம் கோபால் வர்மா, தன் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர் போனவர். எனினும் பிரபல நடிகர்களின் விஷ் லிஸ்டுகளில் என்றும் இடம்பெற்றிருக்கும் இயக்குநர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார்.


இந்நிலையில் ராம் கோபால் வர்மாவுடன் தான் பணிபுரிந்த அனுபவம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.




கடந்த 2010ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா, விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்த நிலையில்,  ​​“சில அனுபவங்கள் நன்றாக இருப்பதில்லை. இயக்குநரின் பார்வையுடன் ஒத்துப்போகவில்லை என்றாலோ, அல்லது கதை நன்றாக இல்லை என்றாலோ இப்படிதான் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.


அதே நேரம் தான் ராம்கோபால் வர்மாவின் ரசிகை என்பதையும் ராதிகா ஆப்தே குறிப்பிட்டுள்ளார்.  ”நான் ராம் கோபால் வர்மாவின் பெரிய ரசிகை, குறிப்பாக ரங்கீலா மற்றும் சத்யா படங்களின் ரசிகை. படப்பிடிப்பு தளத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பற்றி நான் உற்சாகமாக இருந்தேன்.


நாங்கள், ஒரு குழுவாக, வேடிக்கையாக இருந்தபோது சினிமா உலகில் ​​​ஒரு சார்பு மற்றும் சுரண்டல் கலாச்சாரம் பரவலாக இருந்தது. அந்த நேரத்தில் நான் அப்பாவியாக இருந்தேன். அதனால் நான் அப்போது அதிகம் பேசவில்லை, ஆனால் அந்த அனுபவம் நான் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கற்றுத்தந்தது. நான் இங்கு காலூன்ற கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.


சாக்ரட் கேம்ஸ், பார்ச்ட்,  லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட படங்கள், தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ’கபாலி’ படத்தில் நடித்து தமிழ் ஆடியன்ஸை ஈர்த்தார்.











மராத்தி, இந்தி, பெங்காலி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை ராதிகா ஆப்தே நடித்துள்ளார். முன்னதாக பாலிவுட் Vs பிராந்திய மொழி படங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், பாலிவுட்டையும் பிராந்திய மொழி படங்களையும் நாம் சமமாகப் பார்க்க வேண்டும் என அவர் கூறிய கருத்து வரவேற்பைப் பெற்றது.