அதிமுக, திமுக,என தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளில் சிலகாலம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நடிகர் ராதாரவி. தற்போது பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். டப்பிங் கலைஞர்களுக்கான சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் ராதாரவி, பாடகர் சின்மயி தொடர்பான சர்ச்சைக் கருத்துகளுக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இதற்கிடையே அண்மையில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ராதாரவி,தன் சகநடிகர்கள், அரசியல் வாழ்வு என பல விஷயங்களைப் பற்றி மேடையில் பேசினார். 


 



அவர் பேசியதில் இருந்து,’படவிழாவுக்காக அடிக்கடி வெளியூருக்கு போவோம். நடிகர் மயில்சாமிதான் பெரிய ரௌடி மாதிரி. போற இடத்துல ஹோட்டலில் வேலை செய்யற ஆட்களை எல்லாம் அடிச்சிருவாரு. இப்படித்தான் ஒரு இடத்துல அடிச்சிட்டாரு. ஹோட்டல் ஓனர் கோபப்பட்டு எங்களைப் பிடிக்க ஆள் அனுப்பிட்டாரு.’யார் போனாலும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்லதான் போகனும்’ ஸ்டேஷன் போய் அடிங்க’னு சொல்லி ஆள் அனுப்பிட்டாரு. ஸ்டேஷன் வந்த ஆளுங்க எல்லாரும் குள்ளமா கட்டையா இருக்கற ஆளுனு மயில்சாமிய தேடறாங்க. மயில்சாமி சாதுர்யமா எதிர்ல ப்ளாட்பார்ம்ல படுத்திருந்த ஆளுங்க கூட போய் படுத்துட்டாரு. மயில்சாமி இப்படித்தான், எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவரை. ஆனா எல்லாருக்கும் நல்லவனா இருக்கப் பார்ப்பாரு.அது எல்லோராலையும், ஏன் அந்தக் கடவுளாலேயே கூட முடியாது. நான் இதை சொன்னா நம்மை பற்றி மாற்றி சொல்லிடுவாங்க.


நண்பர் பார்த்திபன் நடிச்ச ஒத்த செருப்பு படம் பார்த்தேன்.தியேட்டரில்தான் போய் பார்த்தேன். திருட்டி விசிடியில் படம் பார்ப்பது பெற்றதாயை விடுவதற்குச் சமம்.அதனால் எப்போதுமே தியேட்டரில்தான் படம் பார்ப்பேன். படத்தில் பார்த்திபன் சுனில் தத் மாதிரி நடிச்சிருந்தார். போனில் அழைச்சு பேசிப் பாராட்டினேன். ஒரு வீடியோ தர சொல்லி கேட்டார். உடனே அனுப்பினேன். அதை சிலர் விமர்சிச்சாங்க.நான் எது செய்தாலும் விமர்சிக்கிறார்கள்.


நல்லவேளை அரசியல் தலைவர்கள் எல்லாம் நல்ல காலத்துலேயே போய் சேர்ந்துட்டாங்க. இப்போ காலம் சரியே இல்லை. இப்போ யார் தலைவராகராங்க, யார் கட்சி நடத்துறாங்க எதுவுமே தெரியறது இல்லை. அது அரசியல் விவகாரம். நமக்கு எதுக்கு. நாம சினிமாக்காரன். அரசியலுக்கும் சினிமாவுக்கும் சம்மந்தமில்ல’ இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராதாரவி அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய ராதாரவி, “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் கூட மத்திய பாஜக அரசில் இடம் பெற்றிருப்பார். 


தற்போது பாஜகவில் 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அடுத்து 80 எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜகவை கேட்டுதான் ஆட்சி நடக்கும். தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வோம் என கூறியவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். தற்போது அவரை அருகில் வைத்திருக்கிறீர்கள். மாநில அரசு மத்திய அரசை நோக்கி கையேந்தி தான் ஆக வேண்டும். பிரதமர் மோடி கடந்தமுறை வந்த போது கோ பேக் என பலுான் பறக்க விட்டவர்கள், ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் வரும் போது பறக்க விடுவார்களா?” என கேள்வி எழுப்பிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.