சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் ரச்சிதா மஹாலக்‌ஷ்மி. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் சின்னத்திரையோரமும் இவருக்கு மவுசு அதிகம். அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த அவர், வெயிட் லாஸ் பற்றி பல டிப்ஸ்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய பேட்டியிலிருந்து.


நான் எப்பவுமே எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிடுவேன். அதுபோல் சாதம், இட்லி, தோசை, உப்பு, சர்க்கரை, பால் என வெள்ளையாக இருக்கும் எந்த உணவுமே அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். பெங்களூருவில் மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்களும் உண்டு. ஆனால், நான் எனக்கு ரைஸ் உணவுதான் பிடிக்கும் என்றாலும் கூட உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள இவற்றையெல்லாம் தவிர்த்துவிடுவேன். இப்படி உணவில் ரொம்பவே கவனமாக இருப்பேன். எனக்கு பிரியாணி ரொம்பப் பிடித்த உணவு. என்றாலும் கூட இரண்டு ஸ்பூனுக்கு மேல் சாப்பிட மாட்டேன். அதுவும் என்றோ ஒருநாள். 


அப்புறம் நான் இன்னொரு விஷயம் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் ஜிம் பக்கமே போனது இல்லை. ஜிம் என்பது ஒரு க்ளோஸ்டு ரூம். அங்கே செய்யும் உடற்பயிற்சிக்குப் பதில் நான் என் வீட்டருகே உள்ள பூங்காவில் காற்றோட்டமாக யோகா செய்வேன். சிலம்பு கம்பை பயன்படுத்தி எல்லாவிதமான ஸ்ட்ரெட்ச் உடற்பயிற்சிகளும் செய்வேன். இப்ப சமீபமாக டம்பிள்ஸ் செய்வதை ஆரம்பித்துள்ளேன். அது எனது தோளுக்கான பயிற்சி.


என் உணவை நானே தயார் செய்வேன். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவேன். முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிப்பேன். அதன் பின்னர் உடற்பயிற்சிகள் செய்வேன். காலையில் எனக்கான சாதம் (பிரவுன் ரைஸ்), கீரை, காய்கறி செய்து கொள்வேன். வீட்டிலிருந்து சூட்டிங் கிளம்பும் போது ஒரு கோப்பை லெமன் வித் ஹனி வாட்டர் குடிப்பேன். வெதுவெதுப்பான தண்ணீரில் இதை கலந்து குடிப்பேன். 5 வருடங்களாக இதைச் செய்கிறேன். பின்னர், சூட்டிங் ஸ்பாட்டில் காலையில் சத்துமாவு கஞ்சி குடிப்பேன். 11.30 மணி போல் இளநீர் அல்லது கொஞ்சம் பழங்கள் சாப்பிடுவேன். 12.30 மணிக்கு மதிய உணவு. வீட்டிலிருந்து கொண்டு செல்வதை சாப்பிடுவேன்.


மதிய சாப்பாட்டில் ஒரு நாள் பிரவுன் ரைஸ் என்றால், இன்னொரு நாள் திணை, சாமை, வரகு, குதிரைவாலி என மாற்றிக் கொள்வேன்.மாலை 4 மணி போல் பாசிப்பயறு போன்ற ஏதாவது பயறு சாப்பிடுவேன். இரவு 7 மணிக்கெல்லாம் அதிகபட்சம் 8 மணிக்கெல்லாம் உணவை முடித்துவிடுவேன். இரவில் ஓட்ஸ் அல்லது பார்லி போன்ற லைட்டான உணவை சாப்பிடுவேன். இரவில் விரும்பினால் பன்னீர் சேர்த்துக் கொள்வேன். புரதத்துக்காக முட்டை வெள்ளைக்கரு எடுப்பேன்.


அவ்வளவுதாங்க வெயிட் லாஸ் மந்திரம். சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள், யோகா செய்யுங்கள், வீட்டு உணவையே உண்ணுங்கள், அளவாக சாப்பிடுங்கள், இரவு சீக்கிரம் உணவை அருந்துங்கள், நன்றாக ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள் வெயிட் தானாக மெயின்டெய்ன் ஆகும்.
இதையெல்லாம் தினமும் செய்ய நேரமேது எனக் கேட்பார்கள். இது உழைப்பதற்கான காலம். இப்போது உழைப்பது மட்டுமே நன்மை தரும். ஓய்வுக்கான காலம் வரும். அது வரை உழைத்துக் கொண்டும் உடலை உறுதியாக்கிக் கொள்ளவும்.