நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் முக்கிய அறிவுப்பு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், எதிர்ப்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது. 


படத்தின் டைட்டில் வெளியிட்ட பின்னர் படத்தில் யார் யார் நடித்துள்ளனர் என்பதை தினமும் ஒரு அப்டேட்டாக படத்தினை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இப்படியான நிலையில், நேற்று படத்தில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார். 


 கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. 






ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ராயன் படத்துக்கு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் கதை எழுதியதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை செல்வராகவன் சமூக வலைத்தளப் பதிவு மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். 


அதில், நண்பர்களே, தனுஷின் 50வது படமான ராயன் படத்திற்கு நான் கதை எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. 'ராயனின்' கதைஅல்லது திரைக்கதை  அமைத்தல் போன்ற செயல்முறையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். அது முற்றிலும் நடிகர் தனுஷின் கனவு திட்டம். இப்போது அவர் அதை தனது சொந்த படத்தில் செய்துள்ளார். இந்த திட்டத்தில் நான் ஒரு நடிகனாக மட்டுமே இருக்கிறேன். உங்கள் எல்லோரையும் போல நானும் ராயன்  படத்தை திரையரங்குகளில் வெகு விரைவில் பார்க்க விரும்புகிறேன்.  என் சகோதரன் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்திருந்தார்.