Dhanush Speech at Raayan Audio Launch: நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து அவரது 50வது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷண், துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் ஜூலை 26ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Continues below advertisement


இந்தப் படத்தில் இருந்து அடங்காத அசுரன், கானா பாடல், ராயன் ரம்பிள் என ஏற்கெனவே 3 பாடல்கள் வெளியான நிலையில், நேற்று இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில், தன் மீதான பாடகி சுசித்ராவின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனுஷ் இந்த விழாவில் பேசியுள்ளார். 


‘போயஸ் கார்டனில் கனவு வீடு’




“நான் யாருடைய ரசிகன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், தலைவர் வீட பாக்கணும்னு எனக்கு ஆசை. வழிகேட்டு உள்ள போனதும் அங்க போலீஸ்லாம் நின்னாங்க. ஒரு இடத்துக்குப் போய் தலைவர் ரஜினிகாந்த் வீட்டைப் பாத்து இதுதான் பா தலைவர் வீடுனு சந்தோஷப்பட்ட வண்டிய திருப்பிட்டு வந்தேன். வரும்போது இன்னொரு பக்கமும் பயங்கர கூட்டம். அபோ இங்கதான் ஜெயலலிதா அம்மா வீடு இருக்குனு சொன்னாங்க. அப்போ பைக்க நிறுத்திட்டு இறங்கிப் பாத்தேன்.


‘16 வயசு வெங்கடேஷ் தனுஷூக்கு கொடுத்த பரிசு’


இப்படிப் பாத்தா தலைவர் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா அம்மா வீடு. ஒருநாள் எப்படியாவது இந்த மாதிரி போயஸ் கார்டன்ல ஒரு சிறு வீடாவது வாங்கிடணும்னு ஆசைப்பட்டேன். அப்படி ஒரு விதை என் மனசுல விழுந்துச்சு. அப்போ எனக்கு 16 வயசு. வீட்ல நிறைய கஷ்டம், நிறைய பிரச்னை. ஏகப்பட்ட தொல்லைகள் துள்ளுவதோ இளமை படம் சரியா போலனா நாங்க நடுத்தெருவுக்கு வந்திருப்போம் அப்படிங்கற நிலமை. நேற்றைய பத்தி ஏக்கமில்ல, நாளைய பத்தி கவலையுமில்ல. அப்படி இருந்த அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபு,  20 வருஷம் உழைச்சு இன்னைக்கு இருக்க தனுஷூக்கு கொடுத்த கிஃப்ட் தான் என் போயஸ் கார்டன் வீடு" என்றார்.


‘காலம் பதில் சொல்லும்’


பாடகி சுசித்ராவின் சமீபத்திய நேர்க்காணல்கள் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், நடிகை த்ரிஷா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் உள்ளிட்ட பலரின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை வைத்திருந்தார். இணைய உலகில் சுசித்ராவின் நேர்காணல்கள் பரபரப்பைக் கிளப்பி பேசுபொருளாகின.


இந்நிலையில் ராயன் இசை வெளியீட்டு விழாவில் இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தனுஷ்,  “நம்ம யாருன்னு நமக்கு தெரிஞ்சா போதும். என்ன படைச்ச சிவனுக்குத் தெரியும். எங்க அம்மா, அப்பாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ஃபேன்ஸூக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு காலம் பதில் சொல்லும்” எனக் கூறியுள்ளார்.