செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்


குடும்பச் சூழல் காரணமாக தனது படிப்பை கூட முடிக்காமல் திரைத்துறையில் நடிக்க வந்தவர் தனுஷ். தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியது செல்வராகவந்தான். தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா அங்கீகாரம் பெற்ற ஒரு இயக்குநராக இருந்ததால் இப்படம் கஸ்தூரி ராஜா பெயரோடு வெளியாகியது.   


இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமான காதல் கொண்டேன் படமும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியது. புதுப்பேட்டை , மயக்கம் என்ன போன்ற இவர்களின் கூட்டணியில் உருவான படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது முதல் முறையாக ராயன் படத்தில் ஒரு மாற்றமாக தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருக்கிறார்.


சொல்லிக் கொடுத்தது அவர்தான்


ராயன் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி ஜூலை 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்


தனுஷ் பேசியபோது "என் முதல் படத்தில் நடிக்கும்போது சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. அவ்வளவு கிண்டல்களையும் , உருவகேலிகளையும் , அவமானங்கள் , துரோகங்களைத் தாண்டி இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு உங்கள் கைதட்டல்கள்தான் காரணம். ஒல்லியாக கருப்பாக இருந்த என்னுடன் நீங்கள் எப்படி கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாத என்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தது நீங்கள்தான்.


ஒன்றுமே தெரியாத என்னை நடிகனாக்கியது என் அண்ணன் செல்வராகவன்தான் . அவன் தான் எனக்கு ஆசான். அவர்தான் என் குரு. எனக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்தது என் அண்ணன்தான். எனக்கு சாப்பிட சொல்லிக் குடுத்தது அவர்தான். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசையில் இருந்த என்னை போயஸ் கார்டன் வரை கொண்டு வந்தது அவர்தான்.


படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் சந்தோஷப்படுவேன். ஏனால் அவருடைய படங்களில் என்னை அவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார். அதனால் அதே டார்ச்சரை அவருக்கு நான்  செய்யும்போது நான் அதை ரசித்தேன்" என்று பேசினார்.