80களில், 90களில் ராசா, ராஜா, ராஜாதி ராஜா என படத்தின் பெயரிலும், பாடல்களின் வரிகளிலும் பெரும்பாலும் இந்த பெயர்கள் இடம் பெறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை குஷிப்படுத்தவே இவை இடம் பெறும் என்று கூறுவதுண்டு.


இங்கே நாம் பார்க்கும் படம், ராசய்யா...  இளையராஜாவின் உண்மையான பெயர் என்பார்கள். கிட்டத்தட்ட இளையராஜாவுக்காக எடுக்கப்பட்ட படம் என்று தான் ராசய்யாவை கூற வேண்டும். இளையராஜா இதில் ஹீரோவா? இல்லை. இளையராஜா இதில் இயக்குனரா? இல்லை. இளையராஜா இதில் தயாரிப்பாளரா? இல்லை. அப்புறம் எப்படி இது இளையராஜா படம்?


ஆம்... இளையராஜாவின் இசை தான், இந்த படத்தை சுமந்தது; ஊரெல்லாம் கொண்டு சேர்த்தது. அப்படியென்றால் படத்தில் கதை இல்லையா? கலைஞர்கள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில், ராசய்யா நல்ல பாசப்படைப்பு. ஒரு திருட்டு கூட்டத்தில் பிறக்கும் குழந்தையை, அந்த குழந்தையின் தாய் வைத்த கோரிக்கையை ஏற்று, ஊர் பெரியவர் வளர்க்கும் கதை. தன் உயிரை காப்பாற்றிய தாய்க்கு தான் செய்யும் கையுமாறாக அந்த உதவியை அந்த பெரியவர் செய்வார்.






அந்த பெரியவர் செய்த கைமாறுக்காக, அந்த பெரியரை கவனித்து வருவார் அந்த இளைஞர். இடையில், ஊருக்கு வரும் பெரியவரின் பேத்திக்கும் அந்த இளைஞருக்கும் காதல். அந்த காதலால் ஏற்படும் விளைவுகள் தான் கதை. இளைஞராக பிரபுதேவா. பேத்தியாக ரோஜா, இளைஞரின் அம்மாவாக ராதிகா, பிரபுதேவாவின் நண்பராக வடிவேலு, தாத்தாவாக விஜயகுமார், திருட்டு கும்பல் தலைவனாக நம்பியார் என நச் நச் என்று கதாபாத்திரங்கள். 






படம் முழுக்க கலகலப்பு, கிளுகிளுப்பு என்று இரு தடங்களில் பயணிக்கும். கவர்ச்சியை கட்டுச்சோறு போல அவிழ்த்துவிடும் ரோஜாவும், பாடல்களை தேனருவி போல இறக்கிய ராஜாவும் படத்தின் பெரிய பலம். மஸ்தானா மஸ்தானா, காதல் வானிலே, திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தில் இசை என்னடேவா இளையராஜா என்றாலும், அவரது மகன் கார்த்திக் ராஜாவின் பங்கு பெரிய அளவில் இருந்தது என்பார்கள். 


ஆர்.செல்வராஜ் எழுதி, கே.கண்ணன் இயக்கிய ராசய்யா திரைப்படம், மிகக்குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு, நல்ல வசூல் வேட்டை நடத்திய படம். கடந்த 1995 ஆகஸ்ட் 24 ம் தேதி இதே நாளில் வெளியான ராசய்யா வெளியாகி, 27 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும் திரைப்படம். காமெடி, காதல், பாசம் என கலவையான உணர்வுகளை ஊட்டும் ராசய்யா!