80ஸ் - 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் அபிமான இயக்குநராக விளங்கியவர் ஆர். சுந்தர்ராஜன். 1982ம் ஆண்டு வெளியான 'பயணங்கள் முடிவதில்லை' படம் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். 


 



அதிகமான ஹிட் படங்கள் : 


முதல் படமே அமோகமான வெற்றியை பெற்றதால் அவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்தது. வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி, குங்கும சிமிழ், சுகமான ராகங்கள், என் ஜீவன் பாடுது, மெல்ல திறந்தது கதவு என அடுத்தடுத்து படங்களை இயக்கியதில் பெரும்பாலானவை ஹிட் அடித்து திரை ரசிகர்களை திணறடித்தார். நக்கலும் நையாண்டியும் கலந்த அவருடைய தனித்துவமான ஸ்டைல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 


 


டர்னிங் பாய்ண்ட் படம் :


இசைஞானி இளையராஜாவின் இசையும் ஆர். சுந்தராஜனின் இயக்கமும்  சேர்ந்த படைப்பு மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டது. அவரின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம். இப்படத்தின் ஹீரோவான நடிகர் விஜயகாந்துக்கும் மிக நல்ல பெயரை பெற்று கொடுத்த படமாக அமைந்தது. 


 



சுந்தர்ராஜன் போட்ட கண்டிஷன்: 


சமீபத்தில் ஆர். சுந்தர்ராஜன் கலந்து கொண்ட நேர்காணலில் அவர் ஏ.வி.எம் நிறுவனம் கூட தன்னை நம்பவில்லை என மிகுந்த மனவருத்தத்துடன் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் தன்னிடம் ஒரு சொந்த வீடு கூட இல்லை என்ற மனக்கவலையில் இருந்த சுந்தர்ராஜன், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் யார் அவருக்கு ஒரு வீடு வாங்கி தருகிறார்களோ அவர்களுக்கு தான் அடுத்த படத்தை இயக்கி கொடுப்பதாக கூறியுள்ளார். 


ஒத்துவராத ஏ.வி.எம் நிறுவனம் :


இந்த தகவல் அறிந்த ஏ.வி.எம் நிறுவனம் ஆர். சுந்தராஜனுக்கு அட்வான்ஸ்  பணமாக 2 லட்சம் கொடுத்துள்ளனர். அதை அவர் வீட்டுக்கு முன்பணமாக கொடுத்துள்ளார். பின்னர் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் கதையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொல்லி அதில் விஜயகாந்தை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி கூறியுள்ளார். அதை மறுத்த ஏ.வி.எம் நிறுவனம் 'நான் பாடும் பாடல்' படத்தில் ஹீரோவாக நடித்த சிவகுமாரை தான் ஹீரோவாக போட வேண்டும் என கூற சுந்தர்ராஜன் அதை மறுத்துள்ளார். 


கடைசியில் நடந்த ட்விஸ்ட் : 


இதனால் ஏ.வி.எம் நிறுவனம் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன் என்ன செய்வதென தெரியாமல் கவலையில் இருந்துள்ளார். அதை பார்த்த கதாசிரியர்  தூயவன் நடந்ததை பற்றி கேட்டறிந்து பஞ்சு அருணாச்சலத்திடம் அழைத்து சென்றுள்ளார். அவரும் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் கதையை கேட்டு அதற்கு ஒகே சொல்லிவிட்டாராம். அதற்கு அட்வான்ஸ் தொகையாக 2 லட்சம் பெற்று கொண்டு அதை ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். ஏ.வி.எம் நிறுவனம் தன்னை நம்பாமல் கைவிரித்தது குறித்து அந்த நேர்காணலில் மிகவும் வருத்தப்பட்டு பேசி இருந்தார் சுந்தர்ராஜன்.