கொரோனா காலத்தில் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தனது மருத்துவ செலவுகளை கமல்ஹாசன் ஏற்றுகொண்டதாக மறைந்த நடிகர் ஆர்.எஸ் சிவாஜி பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


ஆர். எஸ்.சிவாஜி


80களின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த 'கார்கி' படம்  மூலம் பாராட்டுகளைக் குவித்தார்.


தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, 1956ஆம் ஆண்டு பிறந்தார். பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி இவரது உடன்பிறந்த சகோதரர் ஆவார்.


கமல்ஹாசனுடன் திரைப்பயணம்


1981ஆம் ஆண்டு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமான ஆர்.எஸ். சிவாஜி, 
தன் திரை வாழ்க்கையின் தொடக்க காலத்தில் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து கவனமீர்த்து வந்தார்.


மீண்டும் ஒரு கோகிலா, விக்ரம், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், குணா, கலைஞன் , அன்பே சிவன் உள்ளிட்ட  பல கமல்ஹாசன் படங்களில்  காமெடி மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி அவருக்கு உற்ற நண்பர்களுள் ஒருவராகவும் வலம் வந்துள்ளார்.


 


என் உயிர்மூச்சு கமல்தான்






ஆர்.எஸ் சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சித்ரா லட்சுமணன் உடன் அவர் பேசிய பேட்டி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது இதயத்தில் நான்கு அடைப்புகள் இருந்ததாகவும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரவேண்டியது அவசியமாக இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.


மேலும் இந்த  நேர்காணலில் தொடர்ச்சியாக நிறைய படங்களில் தான் நடித்து வந்தாலும் கொரோனா காலக்கட்டத்தில் தான் மிகுந்த பண நெருக்கடிகளை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது தான் மிகுந்த தயக்கத்துடன் கமல்ஹாசனிடம் சென்று உதவி கேட்டதாகவும் கமல் உடனே தனது மருந்து பரிந்துரைச் சீட்டை பெற்றுக்கொண்டு அவரது மருத்துவச் செலவுகளை பார்த்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அன்றைய தேதிவரை மாதம் தவறாமல் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் இருந்து தனக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் சரியாக வந்துகொண்டிருந்ததாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் கமலின் செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


ஆர்.எஸ்.சிவாஜியின் இறுதிச் சடங்குகள் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரைத்துறையினரும் தமிழ் சினிமா ரசிகர்களும் ஆர்.எஸ். சிவாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.