திரையுலகில் திறமையானவர்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதை தனது அசாத்தியமான திறமையாலும், பேச்சாற்றலும் நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ஒரு ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி, தன்னுடைய தனித்துமான காமெடி சென்ஸ், டயலாக் டெலிவரி என ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
வெள்ளித்திரை என்ட்ரி :
அதன் மூலம் வெள்ளித்திரையில் நானும் ரவுடி தான், எதிர்நீச்சல், வடகறி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எல்.கே.ஜி படம் மூலம் முழு நீள ஹீரோவான ஆர்.ஜே. பாலாஜி தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க அதனை தொடர்ந்து அவரின் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர் சலூன் :
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்க கோகுல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி மிகவும் ஸ்டைலான ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் புரொமோஷனுக்காக சென்ற போது ஆர்.ஜே. பாலாஜி, மாகாபா ஆனந்த் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
மாகாபா செய்த காமெடி :
"தசாவதாரம் படம் ரிலீசான போது எங்க எல்லாரையும் படம் பார்த்துவிட்டு படம் ரொம்ப பிடிச்சுது, படத்தை பத்தி என்ன தோணுதோ அதை உங்களுடைய ஷோல சொல்லுங்கன்னு எங்க ஸ்டேஷன்ல சொன்னாங்க. அப்போ மாகாபாவோட ஷோ தான் ஃபர்ஸ்ட் வருது. அவன் போய் தசாவதாரம் படம் பத்தி சொல்லும் போது 'இந்த படத்துல கமல் சார் நல்லா வேஷம் போட்டு இருந்தாரு. பத்து வேஷம் போட்டு இருந்தாரு. அதிலயும் அந்த நெப்போலியன் வேஷம் சூப்பரா இருந்துச்சு...' அப்படினு பேசுனான். அவன் வேணுமே அப்படி பேசலை. அவனுக்கு உண்மையிலேயே எது வேஷம், எது நிஜம் என தெரியல. அந்த அளவுக்கு தான் இருந்துது அவனோட சினிமா நாலெட்ஜ்" என தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் கலாய்த்து பேசி இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி.
மாகாபா பயணம் :
மாகாபா ஆனந்தும் ஒரு ஆர்.ஜேவாக தான் தன்னுடைய பயணத்தை துவங்கினார். கோவையில் சூரியன் FMல் இருந்து பின்னர் ரேடியோ மிர்ச்சி FM சேனலுக்கு வந்தார். அதன் மூலம் விஜய் டிவியில் அது இது எது மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக வானவராயன் வல்லவராயன் என்ற படத்திலும் அறிமுகமானார். தற்போது விஜய் டிவியின் மோசட் வான்டட், மோசட் ஃபேவரட் தொகுப்பாளராக ஏராளமான ரசிகர்களை பெற்று கலக்கி வருகிறார் மாகாபா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபாவும், பிரியங்கா தேஷ்பாண்டேவும் ஒன்றாக இணைந்தால் அந்த நிகழ்ச்சி படு ஜோராக என்டர்டெயினிங்காக இருக்கும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.