Thulladha Manamum Thullum: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் தனக்கு முதன் முதலில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியை சந்தித்து இனிப்பு வழங்கி இயக்குநர் எழில் ஆசி பெற்றார். 

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தது 1999ம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் தான். எவர்கிரீன் கிளாசிக் ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ருக்கு மற்றும் குட்டியின் காதல் காவியத்துக்கு ரசிகர்கள் ஏராளம். படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தவை. 

 

முதலில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்திற்கான கதையை எழுதிய இயக்குநர் எழில் அதை சில தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார். ஆனால், படத்தில் நெகட்டிவ் கிளைமேக்ஸ் இருப்பதாக கூறி படத்தை தயாரிக்க அவர்கள் யாரும் முன்வரவில்லை. பின்னர், கடைசி வாய்ப்பாக ஆர்.பி. சௌத்ரியிடம் கதையை எழில் கூறியுள்ளார். அதை கேட்டதும் கதை பிடித்து போன ஆர்பி சௌத்ரி படத்தில் இறுதி கிளைமேக்ஸ் காட்சியை பாசிட்டிவாக வைக்க முடியுமா என கேட்டுள்ளார். அதன்படி துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பாசிடிவ் காட்சிகளைப் பெற்றது. 

 

காதல் காவியமான துள்ளாத மனம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முரளி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், முரளி பிசியாக இருந்ததால், எதிர்பாராத விதமாக விஜய் நடிக்க ஒப்புக் கொண்டார். இதேபோல், ரம்பாவை ஹீரோயினாக தேர்வு செய்த நிலையில், அவரும் பிரியாக இருந்ததால், சிம்ரன் நடிக்க ஒப்புக் கொண்டார். இருவரும் ஒவ்வொரு காட்சியில் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தனர்.  அதேசமயம் முதலில் இந்த கதை வடிவேலுக்கு எழுதப்பட்டு பின் விஜய் வந்த பிறகு வேறுவடிவம் பெற்றது. 

 

இந்த நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் படம் திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ரசிகர்களும், படக்குழுவும் கொண்டாடி வருகிறது. அதன்படி, சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரியை சந்தித்த இயக்குநர் எழில், “துள்ளாத மனமும் துள்ளும்”  படத்தை தயாரித்து தனது முதல் படத்துக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரியை நேரில் சந்தித்த எழில் இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார்.


இதேபோல் விஜய்யையும் எழில் சந்தித்துள்ளார். துள்ளாத மனமும் துள்ளும் படம் குறித்து பேசிய எழில், “ படத்தின் 25 வது ஆண்டு நிறைவு குறித்து பேச  விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். மற்றும் சிம்ரன் போனில் வாழ்த்தினார்” என கூறியுள்ளார். தற்போது விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை எழில் இயக்கி கொண்டிருக்கிறார். படப்பிடிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.