ஆர்.ஜே, நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன், கிரிக்கெட் காமென்டேடர், நடிகர், இயக்குனர் என தனக்குள் பல திறமைகளை உள்ளடக்கியவர் ஆர்.ஜே. பாலாஜி. முதலில் இவர் சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமானார். தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 


 



ஆர்.ஜே. பாலாஜியின் மற்றோரு பரிமாணம்:


அதனை தொடர்ந்து தைரியமாக அரசியலை விமர்சிக்கும் ஒரு ஹீரோவாக எல்.கே.ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கு ஹீரோ ரோல் ஒர்க் அவுட் ஆனதால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டுகளை குவித்தது. ஆர்.ஜே. பாலாஜியின் வித்தியாசமான இந்த ஜானர் அவரின் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. 


போலி சாமியார் முகத்திரை கிழிந்தது :


அந்த வகையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஊர்வசி, மௌலி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த இப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். போலி சாமியார்களின் உண்மையான முகத்தை வெளிகொண்டு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வெற்றிப்படமானது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் துணை இயக்குனராகவும் தூள் கிளப்பியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. 


அனுஷ்காவின் வாய்ப்பை கைப்பற்றிய நயன் :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க எந்த ஐடியாவும் கிடையாது. முதலில் நடிகை அனுஷ்காவை தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவரிடம் பேசி சம்மதம் வாங்கினாலும் அவர் 8 மாதங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என தெரிவித்ததால் அது சரிப்படாது என்ற காரணத்தால் நயன்தாராவை அணுகியுள்ளார். அவர் உடனே சம்மதம் சொல்லவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்தார். நயன்தாராவின் திரை வாழ்க்கையில் இப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.