’பகாசூரன்’ பட இயக்குனர் மோகன் ஜிக்கு தயாரிப்பாளர் கௌதம் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களைத் தொடர்ந்து மோகன்.ஜி தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கிய ’ பகாசூரன்’ படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தப் படத்தை தமிழ்நாடெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குனர் மோகன் ஜிக்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், முன்னதாக படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.


இந்த விழாவில் திரௌபதி பட நாயகனும் நடிகர் அஜித்தின் மச்சானுமான நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


பகாசூரன் படம் ஒருபுறம் குடும்ப ஆடியன்சை ஈர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மற்றொரு புறம் மோகன் ஜி படங்களுக்கு வழக்கமாக வரும் எதிர்ப்புகளைப் போல் இந்தப் படத்துக்கும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.


முன்னதாக இயக்குநர் அமீர் முன்னதாக பகாசூரன் படத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்ததுடன், வட இந்தியாவைப் போல் ஆரோக்கியமற்ற சூழலை தமிழ்நாட்டிலும் உருவாக்கப் பார்க்கிறார்கள் என்றும்,  அண்ணாமலை, ஹெச்.ராஜா,  உள்ளிட்டோர் மோகன் ஜி படங்களை உடனடியாகப் பார்த்து கருத்து சொல்வதாகவும்,மெட்ராஸ், காலா, அசுரன், கபாலி படங்களைப் பார்த்து கருத்து கூறுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மோகன்.ஜி, தான் கடன் வாங்கி படம் எடுத்ததாகவும், தன் படங்களை பாஜகவினருடன் தொடர்புபடுத்திப் பேசிய அமீர் தன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லது 3 நாள்களுக்குள் தன் கருத்தைப் பின்வாங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.


”என் நான்காவது திரைப்படமான பகாசூரன் 2ஆவது வாரமாக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பற்றி நிறைய நல்ல கருத்துக்களும் வந்து கொண்டுள்ளன.


ஆனால் இயக்குனர் அமீர் படம் பார்க்காமல் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்.
பகாசூரன் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். நான் யாரிடமும் பணம் வாங்கி படத்தை இயக்கவில்லை.


கடன் வாங்கி தான் நான் படத்தை இயக்கி இருக்கிறேன். வெளியே 2 பேரிடம் கடன் வாங்கி தான் நான் படம் எடுத்துள்ளேன். நானே தான் படத்தின் தயாரிப்பாளர். எந்தக் கட்சியை சார்ந்தவர்களிடமும் நான் பணம் வாங்கி படம் எடுக்கவில்லை.


பகாசூரன் படத்தினை அனைவரையும்  பார்க்க தான் அழைக்கிறேன், தேவை இல்லாமல் படத்தையே பார்க்காமல் இப்படி தவறான கருத்துக்களை கூற வேண்டாம் 


பெண்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்று நான் சொல்வது போல் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பகாசுரன் படத்தை ஒரு மாநிலத் தலைவராகவும் தேசியக் கட்சியை சேர்ந்தவருமான அண்ணாமலை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பகாசூரன் பெண் குழந்தைகளுக்கான,  பெற்றோருக்கான சிறந்த படம்.நான் சொல்வதை மட்டுமே கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம்” எனப் பேசினார்.