மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.


மாமன்னன் பட வசனம்


சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


“நாங்குநேரியில் நடந்த சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையை உடனடியாக எடுப்பது அவசியம். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்குநேரி சம்பவங்கள் போல் 15 சம்பவங்கள் நடந்துள்ளன.


முக்கூடல், திசையன்விளை, சீவலப்பேரி, நடுக்கல்லூர், வீரவநல்லூர், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15-க்கும் அதிகமான இடங்களில் சாதிய ரீதியாலான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன” எனப் பட்டியலிட்டார்.


திமுகவில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களை சாதிய ரீதியாக நியமித்ததில் இருந்துதான் சாதிய பாகுபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் சாதிய மோதல்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமே திமுகதான்.


நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது. அவற்றை ஈடுகட்டவே இதுபோன்ற சாதிய பிரச்சினைகளை திமுகவே தூண்டிவிடுகிறது. மாமன்னன் படத்தில் ஃபகத் பாசில் பேசிய சில வசனங்களை அனுமதித்தது ஏன்? எங்கள் பரம்பரையே தாழ்த்தப்பட்ட மக்களை நிற்க வைத்து பார்ப்பதுதான் என்ற வசனத்தை வைத்து நடித்த உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம்


மாமன்னன் திரைப்படம் கடந்த கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


திரையரங்குகளில் மாமன்னன் படம் 52 கோடிகள் வரை வசூலித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது முதல் இணையத்தில் பேசுபொருளாகி பல விவாதங்களைக் கிளப்பியது.


குறிப்பாக மாமன்னன் படத்தில் சாதிய வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய ஃபகத்தின் கதாபாத்திரத்தை ஹீரோவாக சித்தரித்து பல மீம் பக்கங்கள் வீடியோக்களை வெளியிட்ட நிலையில், இணையத்தில் இந்த ட்ரெண்ட் வைரலானது. நடிகர்  ஃபகத் ஃபாசிலின் நடிப்புக்கு ஃபயர் விட்டு சிலர் இந்த வீடியோக்களைப் பதிவிட்ட போதிலும், பலர் ஃபகத் கதாபாத்திரத்தின் ஆதிக்க சாதி மனப்பான்மையை கொண்டாடும் வகையில், அக் கதாபாத்திரத்தினை ஹீரோ போல் சித்தரித்து மீம்கள் பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதிர்ச்சி தந்த இணைய ட்ரெண்ட்


இந்த ட்ரெண்ட் ஒரு சில நாள்கள் தொடர்ந்த போதிலும் மறுபுறம் லொகேஷ கனகராஜ், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் ஓடிடி ரிலீசுக்கு பின் இப்படத்தைப் பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பகிர்ந்தனர். மேலும், உலக அளவிலான டாப் 10 நெட்ஃப்ளிக்ஸ் படங்களில் மாமன்னன் திரைப்படம் இடம்பிடித்தது.


முன்னதாக நடிகர் ஃபகத் இணையத்தில் தன் ‘ரத்தினவேலு’ கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அதனை தன் ஃபேஸ்புக் கவர் பக்கத்தில் வைத்திருந்தார்.


தொடர்ந்து பலரும் சாதிய கமெண்டுகளை இந்தப் புகைப்படத்தின் கீழ் பகிர்ந்த நிலையில், தன் ஃபேஸ்புக் புகைப்படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.