டிஎஸ்பி இதுதான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் செல்லப் பெயர். இவருடைய இசை துள்ளலிசை ரகம். அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இவர் இசை மெகா ஹிட். சமந்தா குத்தாட்டம் போடும் ஓ சொல்றியா மாமா.. ஓஒ சொல்றியா.. எல்லா மொழிகளிலும் ஹிட்டோ ஹிட். யூடியூபில் டாப் 100 மியூசிக்கல் வீடியோ பட்டியலில் மிகக் குறுகிய காலத்திலேயே இடம்பிடித்துவிட்டது. 


இந்த வெற்றிக்குப் பின்னர் தேவி ஸ்ரீ பிரசாத் அளித்துள்ள ஓபன் பேட்டி


தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் நம்பும் இசையமைப்பாளராக இருக்கிறீர்களே? அது எப்படி சாத்தியமானது?
என்னிடம் ஒரு கதையைச் சொல்லி பொறுப்பை ஒப்படைக்கும் போது எனக்கு எனது ரசிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். மக்களை திருப்திப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவே நான் நினைப்பேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை இன்னும் பொறுப்பாக, இன்னும் உத்வேகமாகச் செயல்பட உதவும். 


நீங்கள் ஒரு ட்ரெண்ட்செட்டராக அறியப்படுகிறீர்கள். அதன் நுணுக்கத்தை சொல்லுங்களேன்..
ஒரு ரசிகனாக நான் டியூனை யோசிப்பேன். நான் எப்போதும் இசையமைப்பாளராக டியூனை யோசித்தது இல்லை. அப்படிக் யோசிக்கும்போது அந்த டியூன் சரியானதாக அமையும். 


புஷ்பா படத்தின் அனைத்துப் பாடல்களும் ஐந்து மொழிகளிலும் ஹிட். ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றமாதிரி எப்படி இசையமைக்கிறீர்கள்?
இந்தக் கேள்வியைக் கேட்டதில் மகிழ்ச்சி. ஒரு மொழி தெரிந்தால் மட்டுமே அந்த மொழி ரசிகர்களுக்கான பாடலை அமைக்க முடியும். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. ஒரு மொழியில் பொருந்தும் கவிதை இன்னொன்றுக்கு பொருந்தாது. ஒவ்வொரு மொழிக்கு ஏற்றமாதிரியும் சிறுசிறு மாற்றங்களைச் செய்ய வேண்டும். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தெரியும். இது எனக்கு இசையமைக்கும் போது கைகொடுக்கிறது. மலையாள, கன்னடப் படங்களுக்கு வேலை செய்யும்போது மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் லிரிக்ஸை அறிவேன். 


யூடியூப் குளோபல் டாப் 100 லிஸ்டில் இடம் பிடித்தது பற்றி கூறுங்கள்..
அதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் சுகுமார் சாருக்கும், தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும், அல்லு அர்ஜூனுக்கும் நன்றி.




ஓ சொல்றியா பாடல் ஹிட் ஆனது போல் சர்ச்சையும் ஆனது. அதில் உங்கள் கருத்து என்ன?
இப்போதெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் சர்ச்சையாக்குகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வேலையைச் செய்ய வேண்டும்.


அடுத்ததாக என்ன படங்கள் கையில் வைத்துள்ளீர்கள்?
சிரஞ்சீவி சாரின் பாபி, ஹரிசங்கர் சார் படம், பவன் கல்யாண் படம் ஆகியன உள்ளன. ரவி தேஜா சாரின் கில்லாடி படம் முடிந்துவிட்டது. நாகேஷ் குக்குனூர் சார் இயக்கத்தில் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன்.