சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.



அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 4.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா உருவெடுத்தது. சென்னை சிட்டியில் - 40 லட்சமும், செங்கல்பட்டு ஏரியாவில் - 1.30 கோடியும்,  கோயமுத்தூர் ஏரியாவில் - 67 லட்சமும், மதுரை- ராம்நாடு பகுதியில் - 33 லட்சமும், திருச்சி - தஞ்சாவூர் பகுதியில் - 31 லட்சமும், சேலம் பகுதியில் - 32 லட்சமும், வட & தென் ஆற்காடு பகுதியில் - 55 லட்சமும், திருநெல்வேலி  & கன்னியாகுமரி பகுதியில் - 20 இலட்சமும், தமிழகம் முழுவதும் - 4.08 கோடி ரூபாயை வசூலித்தது, புஷ்பா திரைப்படம். இந்நிலையில் இரண்டாவது நாளில் புஷ்பா திரைப்படம் இரண்டாவது நாளில் 3 கொடியே 51 லட்ச ரூபாயை தியேட்டரில் வசூலித்துள்ளது. இந்த வசூலானது முதல்நாளில் ஆன வசூலில் 80% சதவீதம் ஆகும். முதல் இரண்டு நாளில் தமிழகத்தில் மட்டும் 7.59 கோடி ரூபாயை வசூலித்துள்ளது புஷ்பா திரைப்படம். 



ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று இந்த படத்தின் வசூல் விடுமுறை தினம் என்பதால் முதல் நாள் வசூலை விட அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது. கிறிஸ்துமஸை ஒட்டி ஏழுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வர இருப்பதால் கண்டிப்பாக தியேட்டர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தில் 25 கோடி ரூபாய் வரை வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே 'அலா வைகுந்தபுரமுலோ' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு 'புஷ்பா: தி ரைஸ்' வெளியானது. 'அலா வைகுந்தபுரமுலோ' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.