பல்வாலில் செல்போனை திருடியதாக ஒரு இளைஞர் அவரது நண்பர்களால் அடித்துக்கொல்லப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்த்தியுள்ளது. 


டிசம்பர் 15ஆம் தேதி பல்வாலில் ஒருவரின் மொபைல் போனை திருடியதற்காக 22 வயது முஸ்லீம் இளைஞரை அவரது மூன்று நண்பர்கள் அடித்துக் கொன்றனர். இது ஒரு பிரிவினைவாத குற்றம் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பல்வால் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரசூல்பூரைச் சேர்ந்த கான், தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். 


இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிந்த உடனேயே போலீசார் விபத்தில் மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் பின்னர் பிரேதப் பரிசோதனையில் பலத்த காயங்கள் இருப்பதை உறுதி செய்ததும் கொலைப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளைச் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்ட இளைஞரை மூன்று நபர்கள் அடிப்பதைக் காட்டுகிறது.


சந்தேகிக்கப்படும் 3 நபர்களும் பல்வால் ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற தில்ஜாலே, விஷால் மற்றும் கலுவா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 


இதுகுறித்து பல்வாலில் உள்ள சந்த் ஹட் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ராம் சந்தர் ஜாகர் கூறுகையில், “டிசம்பர் 15 ஆம் தேதி ராகுல் கான் என்ற நபர் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்), மற்றும் 304 A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் நாங்கள் வழக்குப் பதிவு செய்தோம். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் தாக்குதலுக்கான காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சம்பவத்தின் வீடியோவுடன் எங்களை அணுகினர். இதையடுத்து, அதை கொலை வழக்காக மாற்றி, சந்தேக நபர்களை கைது செய்தோம்.


வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளோம். அதை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்புவோம். இது பிரிவினைவாத குற்றமாக இருந்தால், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றங்களைச் சேர்ப்போம். இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்பதை நிரூபிக்க ஆகாஷ் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவில் ‘அவனை அடிக்க வேண்டாம். அவன் போகட்டும்’ என்று கூறுகிறார். பழியில் இருந்து தப்பிக்க இந்த வீடியோ உதவும் என்று ஆகாஷ் நினைத்துள்ளார்” எனத் தெரிவித்தார். 


“திருமண நிகழ்ச்சியில் மது அருந்திவிட்டு ராகுல் தனது மொபைல் போனை திருடிச் சென்றதால் கலுவா கலக்கமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கலுவா, ராகுலை தாக்க தனது நண்பர்களை தூண்டினார். அவர் பலத்த காயமடைந்து இறக்கக்கூடும் என்பதை அவர்கள் உணரவில்லை” என்று விசாரணையின் போது ஆகாஷ் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 


இதுகுறித்து கானின் மனைவி சைனா கூறுகையில், “டிசம்பர் 14 ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கான் அவரது 3 நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மாலை 6 மணியளவில் கலுவா எங்களுக்கு போன் செய்தார். அப்போது நாங்கல் ரோடு கால்வாய் அருகே ராகுல் விபத்திற்குள்ளானதாகவும் அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தார். 


அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் எங்களை அங்கு வரும்படியும் கலுவா கூறினார். டிசம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பு, கலுவா உட்பட ஐந்து பேர் தன்னை கம்பிகளால் தாக்கியதாக கான் தன்னிடம் கூறினார். குற்றத்தை மறைப்பதற்காகத்தான் கலுவா விபத்து என்று நாடகமாடியுள்ளார்.  டிசம்பர் 15ஆம் தேதி எங்களுக்கு வீடியோ ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில் ராகுல் கெஞ்சுவதையும் அவர்கள் இரக்கமில்லாமல் தாக்குவதையும் காணலாம். மேலும், சந்தேகநபர்கள் ‘நாங்கள் இந்துக்கள், நீங்கள் முஸ்லிம்’ என்று கூறி மிரட்டுகின்றனர். 


இதுகுறித்து இறந்தவரின் சகோதரி ரைசா கூறுகையில், “இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய ரயில்வேயில் இருந்து எனது தந்தை ஓய்வு பெற்றார். அவரின் ஓய்வு நிதியிலிருந்து பணம் தருமாறு ராகுல் கானை அவரது நண்பர்கள் வற்புறுத்தினர். அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள். என் சகோதரனிடம் பணம் கேட்டனர். கடந்த மாதம், என் சகோதரர் அவர்களுக்கு ரூ.2,000 கொடுத்தார். ஆனால் அவர்கள் ரூ. 5,000 வேண்டும் என்று கேட்டனர்,” எனத் தெரிவித்தார். 


மேலும் ராகுல் கான் எந்த பொருளையும் திருடவில்லை. வேண்டுமென்றே அவர்கள் பழி போட்டு வழக்கை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என ராகுலின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.