Pushpa 2 Day 4 Collection:  புஷ்பா 2 திரைப்படம் முதல் 3 நாட்களில் 621 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ரூ.800 கோடி வசூலித்த புஷ்பா 2


பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக அமைந்தாலும், ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக வசூலில் முன்பு இருந்த பல சாதனைகளை அடித்து துவைத்து வருகிறது. கடந்த 5ம் தேதி வெளியான இப்படம், உலக அளவில் முதல் நாளில் மட்டுமே 294 கோடி ரூபாய் வசூலித்ததாக புஷ்பா படத்தை தயாரித்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்தடுத்த நாட்களிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. வார இறுதி நாட்களில், இந்த படம் அதிகப்படியான வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உண்மையாகியுள்ளன. முதல் இரண்டு நாட்களில் 449 கோடி ரூபாயை வசூலித்ததோடு, இந்திய சினிமா வரலாற்றில் அதிவேகமாக 500 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை மட்டும் உலக அளவில் இந்த திரைப்படம், சுமார் 170 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அதைதொடர்ந்து, நேற்றைய நாள் முடிவில், புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சாக்னிக் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



”புஷ்பா 2” 4வது நாள் வசூல் நிலவரம்:


சாக்னிக் இணைதள தரவுகளின்படி, புஷ்பா 2 திரைப்படம் நான்காவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 140 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதில், தெலுங்கு மார்க்கெட்டில் ரூ.44 கோடி, இந்தி மார்க்கெட்டில் ரூ.85 கோடி, தமிழ் மார்க்கெட்டில் ரூ.9.5 கோடி, கன்னட மார்கெட்டில் 1.1 கோடி மற்றும் மலையாள மார்கெட்டில் ரூ.1.9 கோடி அடங்கும். இன்னும் பல சிறிய திரையரங்குகளில் நேரடி டிக்கெட் விற்பனையும் தொடர்கிறது. எனவே அதையும் கருத்தில் கொண்டால், நான்காவது நாளிலும் இந்தியாவில் மட்டுமே புஷ்பா 2 திரைப்படம் 150 கோடி வசூலித்து இருக்கும் என நம்பப்படுகிறது. அதுபோக, வெளிநாட்டு வசூலை முதல் நாளை காட்டிலும், பாதியளவிற்கு கருத்தில் கொண்டாலே குறைந்தது 35 கோடி ரூபாய் வசூலாகி இருக்கும். அதன்படி,  நான்காவது நாளின் முடிவில் புஷ்பா 2 திரைப்படம் மொத்தமாக, சுமார் 800 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 


தொடரும் வசூல் வேட்டை:


படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற சாதனையை கூட இந்த திரைப்படம் படைக்க அதிக வாய்ப்புள்ளது.


சுகுமார் இயக்கிய இப்படத்தில், சிவப்பு சந்தனக் கடத்தல்காரரான புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜுன்) பல சவால்களை கடந்து செல்லும் கதையைத் தொடர்கிறது. ஃபஹத் பாசில் அச்சுறுத்தும் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் ஆக மீண்டும் தோன்றியுள்ளார். ராஷ்மிகா மந்தனா முதல் பாகத்தில் வந்த ஸ்ரீவல்லியாக நடிக்கிறார். கூடுதலாக ஜெகபதி பாபு இணைந்துள்ள சூழலில், தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ்., பின்னணி இசையமைத்துள்ளது.


முதல் பாகமான புஷ்பா: தி ரைஸ், 2021 இல் கொரோனா சூழலில் வெளியானது. இது உலகளவில் ரூ.326.6 கோடி வசூல் செய்தது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.