தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற ம்ம்ம் சொல்றீயா.. பாடல் இந்திய அளவில் ஹிட் அடித்ததால் புஷ்பா படமும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.


ரிலீசான புஷ்பா 2:


இந்த படத்திற்கான கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள திரையரங்கில் நேற்று மாலை முதலே கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.


இந்த நிலையில், நேற்று இரவு ஹைதரபாத்தில் உள்ள ஆர்.டி.சி. கிராஸ்ரோட்ஸ் சாலையில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா படத்தின் சிறப்புக்காட்சி இரவு திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.

கடும் நெரிசல்:


புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் புஷ்பா படம் பார்க்க அல்லு அர்ஜூன் வந்திருக்கும் தகவல் அறிந்ததால் ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்தனர். அப்போது, தில்சுக்நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ரேவதி தனது கணவர் பாஸ்கர் மற்றும் 9 வயதான மகன் ஸ்ரீதேஜா மற்றும் மற்றொரு மகனுடன் படம் பார்க்க வந்திருந்தார்.






கடும் கூட்ட நெரிசலில் ரேவதியும், அவரது மகனும் சிக்கிக் கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கிய தனது மனைவி மற்றும் மகனை மீட்க முடியாமல் பாஸ்கர் அவதிப்பட்டார்.  கடும் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவருடன் சேர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி அவரது மகனும் மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கியுள்ளார்.


தாய் மரணம்; மகன் கவலைக்கிடம்:


கூட்ட நெரிசலில் பலரும் அதை கவனிக்காமல் அவர்களை இடித்தும், கீழே தள்ளியும் படம் பார்க்கச் சென்றுள்ளனர். கூட்ட நெரிசலில் மயங்கிக் கிடந்த ரேவதியையும். அவரது மகனையும் கண்டு போலீசாரும், பாஸ்கரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பின்னர், அவர்களை மீட்டு மருத்துமவனைககு கொண்டு சென்றனர். ரேவதிக்கு திரையரங்கிலே முதலுதவி அளித்தும் அந்த முதலுதவி பலன் அளிக்கவில்லை. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேவதி உயிரிழந்துவிட்டதாக கூறினார். அவரது 9 வயது மகன் ஐ.சி.யூ.வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.