சமீபகாலமாக திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கொண்டு சேர்க்கும் விதமாக திரைப்படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியை படக்குழு பிரம்மாண்டமாக செய்து வருகிறது. குறிப்பாக, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப். படங்களுக்கு பிறகு பான் இந்தியா அளவில் பெரிய நடிகர்களின் படங்களை படக்குழு தயாரித்து வருகிறது. இதற்காக, அந்த படங்கள் உருவாகும் மொழிகள் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

புஷ்பா 2:


இந்தாண்டு வெளியாகும் கடைசி பான் இந்தியா படமாக புஷ்பா பார்ட் 2 ரிலீசாக உள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.


இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.


ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்:






நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இருவரும் மேடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இளம் ரசிகர்கள் மேடையில் ஏறிச் சென்று நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்தனர்.


முதலில் ஒரு ரசிகர் ராஷ்மிகா மந்தனாவிடம் இணைந்து செல்ஃபி எடுத்த நிலையில், அடுத்து ஒரு ரசிகர் ஆர்வத்துடன் எடுக்க வந்தார். ராஷ்மிகா மந்தனாவும் ஆர்வத்துடன் போஸ் கொடுத்தார். ஆனால், அங்கே இருந்த பவுன்சர் ஒருவர் அந்த ரசிகரை கழுத்தைப் பிடித்த கீழே செல்லுமாறு தள்ளிவிட்டார். மேலும், ஏற்கனவே போட்டோ எடுத்த ரசிகர் ஒருவரையும் கீழே போகுமாறு மிரட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதே மேடையில் அல்லு அர்ஜூன் நிற்கிறார். ஆனால், அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இதை கவனிக்கவில்லை. அந்த பவுன்சரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பது இயல்பான ஒன்றாகும். அவ்வாறு எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் ரசிகர்களில் சிலர் எல்லை மீறியும் வருகின்றனர். ஆனால், மிகவும் நாகரீகமான முறையில் பிரபலங்களின் அனுமதியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பும் ரசிகர்களையும் இதுபோன்று பவுன்சர்கள் சிலர் நடத்துவதற்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.