புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர் சென்ற பேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியது . தெலங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது படக்குழு.

Continues below advertisement

  நடிகர் பவன் கல்யான் நடித்து வரும் ஹரி ஹர வீர மல்லு படப்பிடிப்புத் தளத்தில் அண்மையில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கு திரைப்படத் துறையில் மற்றொரு துரதிருஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திரைப்பட ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் படமான புஷ்பா 2  படக்குழு சென்ற பேருந்து பெரிய விபத்திற்குள்ளாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் படக்குழு சென்ற பேருந்தில் எதிரில் வந்த தனியார் பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் சில ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு பலத்த காயங்களும் மற்றவர்களுக்கு சிறிய சிராய்ப்புகளும்  ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் நேரவில்லை. கோடிக்கணக்கான மக்கள் திரைகளில் பார்த்து ரசிக்கும் படங்களை உருவாக்க ஒரு படக்குழு எதிர்கொள்ளும் சிரமங்களையே இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதே நேரத்தில் சில தமிழ் படங்களின் படபிடிப்புத் தளத்திலும் இதுமாதிரியான விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. சங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து மேலும் சில சம்பவங்கள் நிகழ்ந்ததன் விளைவாக ஒரு படத்தில் வேலை செய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்கிற விவாதம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

Continues below advertisement

இயக்குனர் சுகுமாறன் இயக்கி அல்லு அர்ஜுன்  ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. தெலுங்கில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டன. அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்று படக்குழு சார்பாக ஒரு சின்ன ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இரண்டாம் பாகத்தின் மேல் பயங்கரமான எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது புஷ்பா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. புஷ்பா 2 இந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.