புஷ்பா 2
அல்லு அர்ஜூன் நடித்து சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு வென்றார் அல்லு அர்ஜூன் . தெலுங்கு சினிமாத் துறையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் என்கிற பெருமைக்குரியவர் நடிகர் அல்லு அர்ஜூன் . ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்து தேசிய விருது வென்ற தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் இந்தப் படத்தில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது இன்று மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா ‘ பாடல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 முதல் பாடல்
முதல் பாகத்தில் ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா முதலிய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆன நிலையில், புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் ரிலீஸ்
வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரையங்கில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கான எதிபார்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. இதற்கு முதன்மையான காரணங்களில் ஒருவர் நடிகர் ஃபகத் ஃபாசில். முதல் பாகத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு பெரியளவில் காட்சிகள் இருக்கவில்லை . இப்படியான நிலையில் இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லனாக அவர் நடித்துள்ளார். இது தவிர்த்து படத்தின் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணம் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் படும் ஒரு நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதனால் தமிழ் ,தெலுங்கு ரசிகர்களைத் தவிர்த்து இந்தியில் இப்படத்தை எதிர்பார்த்து கார்த்திருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.