Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
அல்லு அர்ஜூனின் புஷ்பா தி ரூல் திரைப்படம் மூன்றே நாட்களில் ரூபாய் 500 கோடி வசூலை குவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா படம் இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. புஷ்பா படம் முதல் பாகத்திலே இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் கடந்த 5ம் தேதி வெளியானது.
வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2:
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரூபாய் 100 கோடி வசூலை குவித்தது. இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான புஷ்பா படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Just In




3.20 மணி நேரத்திற்கு படம் இருந்தும் ரசிகர்கள் மத்தியில் புஷ்பா 2ம் பாகத்திற்கு வரவேற்பு கிட்டியுள்ளது. முதல் நாளே ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்த புஷ்பா அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் வசூலை வாரிக்குவித்து வருகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் புஷ்பா 2ம் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிட்டியுள்ளது.
மூன்றே நாட்களில் ரூ.500 கோடி:
வியாழக்கிழமை வெளியான இந்த படம் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் மட்டும் ரூபாய் 500 கோடி வசூலை குவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவில் விரைவாக ரூபாய் 500 கோடி வசூலை எட்டிய முதல் திரைப்படம் என்ற சாதனையையும் புஷ்பா 2ம் பாகம் படைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புஷ்பா படத்திற்கான வசூல் இன்று மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் இறுதியில் தெலுங்கு திரையுலகம் வசூல் மழையில் நனைந்திருப்பதால் டோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சுகுமார் எழுதி இயக்கியுள்ள புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிரோஸ்லா குபா ப்ரோசேக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி இந்த படத்திற்கு எடிட் செய்துள்ளார். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.