புஷ்கர் காயத்ரி இயக்கி விஜய் சேதுபதி, மாதவன் நடித்து வெளியான விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதே படம் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

வேதாளத்தை பிடித்து வரும் விக்ரமாதித்தன்

விக்ரம் என்கிற ராஜா வேதாளத்தைப் பிடித்து வரச் செல்லும் கதையை நாம் சின்ன வயதில்  இருந்தே கேட்டு வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் வேதாளத்தைப் பிடித்து வரும் விக்ரமனை ஏதாவது ஒரு கேள்வி கேட்டு குழப்பி அவனிடம் இருந்த தப்பிச் செல்லும் வேதாளம். இதே கதையை மையமாக வைத்து  ஹாலிவுட் இயக்குநர் டாராண்டினோவின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டது தான்  விக்ரம் வேதா திரைப்படம்.

ஒரு கத சொல்லட்டா சார்

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு பெரிய ரெளடியாக உருவாகி நிற்கிறான் வேதா ( விஜய் சேதுபதி). அவனை எப்படியவது பிடித்தாக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறான் விக்ரம் ( மாதவன்).  ஒவ்வொரு முறை வேதாவைப் பிடித்து வரும்போதும் தன்னைப் பற்றி விக்ரம் அறியாத பல்வேறு உண்மைகளை புதிர்களின் வழியாக தெரியப்படுத்துகிறான் வேதா. படத்தின் இந்த கதைசொல்லல் முறை வழக்கமான ஒரு திருடன் போலீஸ் படமாக இல்லாமல் புதியதான ஒரு அனுபவத்தை நமக்கு கொடுத்தது. மேலும் ஒரு படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை நடிக்க வைத்து இரண்டு தரப்புகளின் அவரவர் நியாயங்களை முன்வைத்து நல்லது கெட்டது என்கிற இருமையை கடந்து பார்வையாளர்களை சிந்திக்க வைத்த படம் விக்ரம் வேதா. 

மணிகண்டன் 

புதிர் போடும் வசனங்கள், ஒரு கத சொல்லட்டுமா சார் என்கிற மாதிரியான கேட்சியான வசனங்கள் படம் முழுவதும் இடம் பெற்றிருந்தன.  குட் நைட் திரைப்படத்தின் கதாநாயகன் மணிகண்டன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதினார். படத்திற்கு தான் வசனம் எழுத தேர்வு செய்யப்பட்ட கதையை மணிகண்டன் சொன்ன கதை மிக சுவாரஸ்யமானது.  ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க மணிகண்டனை அழைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். அந்த சமயத்தில் இரண்டு காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதிவர சொல்லியிருக்கிறார்கள். மணிகண்டன் எழுதிச் சென்றதை பார்த்து அவரையே மொத்தப் படத்திற்கும் வசனம் எழுத சொல்லிவிட்டார்களாம்.

விஜய் சேதுபதி

அதுவரை கதாநாயகனாக மட்டுமே பார்த்து வந்த விஜய் சேதுபதியை நல்லவனாகவும் இல்லாமல் கெட்டவனாகவும் இல்லாத ஒரு கதாபாத்திரமாக உருவாக்கியிருந்தார்கள் புஷ்கர் காயத்திரி தம்பதியினர். இப்படி பல நினைவுகளை கொண்டு விக்ரம் வேதா இன்றோடு 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.