கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிப்பில் அவரது இறுதிப் படமான ஜேம்ஸ் அண்மையில் வெளியானது. கடந்த அக்டோபரில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்த நிலையில் இதுவே அவரது நடிப்பில் வெளியான கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் பட்டாளம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் படத்துக்காகக் காத்துவருகின்றனர். படத்தில் புனித்துடன் நடிகர்கள் ப்ரியா ஆனந்த, ஸ்ரீகாந்த், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜேம்ஸ், பிரியா ஆனந்த், புனித் ராஜ்குமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். 2017ல் இதே கூட்டணியில் ராஜகுமாரா என்கிற திரைப்படம் வெளியானது. இதையடுத்து தற்போது ஜேம்ஸ் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தது குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் பேசியுள்ள ப்ரியா ஆனந்த், ‘புனித் ராஜ்குமார் மாதிரி யாரையுமே பார்க்க முடியாது. சிலபேர் பப்ளிக்கா ரொம்ப எளிமையா இருப்பாங்க. ஆனால் பழகினதும் அவங்கக்கிட்ட வேற முகம் தெரியும். ஆனால் புனித் ராஜ்குமார் அப்படி இல்லை. ஒவ்வொருவர் கிட்டையும் மதிப்போடையும் மரியாதையோடவும் நடந்துப்பார். எனக்கு முதன்முதலில் கன்னடம் கற்றுக்கொடுத்தது அவர்தான். கன்னட உணவுவகைகள் அவ்வளவு அறிமுகப்படுத்தியிருக்கார். எங்காவது கோவிலுக்குப் போகக் கூட தன்னுடைய அசிஸ்டண்டை வைத்து உதவி செய்வார். ராஜகுமாரா படத்துக்கு ஆஸ்திரேலியாவில் எல்லாம் போய் ஷூட் செய்தோம். அங்கேயும் கூட அவ்ரைப் பார்க்க நண்பர்கள் வந்தார்கள். இங்கே மீடியாவில் கூட அவருக்கு நேரடித் தொடர்புதான் இருந்தது. பிஆர்ஓ எல்லாம் இல்லை. தன்னுடைய நண்பர்கள் சாக்லேட் செய்கிறார்கள் என எனக்கு பேக் செய்து கொடுத்து என்னுடைய அம்மா அப்பாவுக்குத் தரச் சொன்னார்.அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. அவருடன் இந்தப் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருந்தாலும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அவர் உயிருடன் இருந்தபோதே அவரது படங்கள் பல ரிக்கார்ட்களை ப்ரேக் செய்தது. இப்போது இந்தப் படம் முழுக்க முழுக்க அவருடையததுதான்’ என கண்ணீர் சிந்தியபடியே பகிர்ந்துகொண்டார்.