தமிழ் சினிமாவின் தனித்துமான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கிலும் திரையிடப்பட உள்ளது. லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி என மிக பெரிய திரை பட்டாளம் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் சுமார் 500 கோடி வசூல் செய்த இப்படம் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



சூடு பிடிக்காத PS2 ட்ரைலர் :


'பொன்னியின் செல்வன் 2' படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொன்னாலும் ஒரு சில ரசிகர்களை பொறுத்தவரையில் அதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் சரியான அளவில் மக்களிடம் போய் சேரவில்லை என்பது அவர்களின் வருத்தமாக உள்ளது. தமிழில் வெளியான ஒரே வாரம் கழித்தே மற்ற மொழிகளில் PS2 ட்ரைலர் வெளியானது. யூடியூபில் தமிழில் வெளியான டிரைலர் 11 மில்லியனையும், இந்தியில் 13 மில்லியன் வியூஸ்களையும் பெற்றது.  


வரவேற்பை பெற்ற புஷ்பா 2 :


அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 36 மில்லியன்  வியூஸ் கடந்து பட்டையை கிளப்பி வருகிறது. அதே போல புதுமுகங்கள்  நடித்துள்ள 'யாத்திசை' திரைப்படம் இரண்டே நாட்களில் 6 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பொன்னியின் செல்வன் 2 டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளும் ஆமை வேகத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. ட்ரைலர் வெளியான பிறகு வேறு எந்த ஒரு புதிய அப்டேட்டும் அதற்கு பிறகு வெளியாகவில்லை. அதை ஈடுகட்டும் விதமாக அப்படத்தின் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளது வெறும் சப்பை கட்டாகவே தெரிகிறது. 


 



PS2 பாடலின் லிரிக்கல் வீடியோ :


பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ‘வீரா ராஜ வீரா' பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ளது. அதன் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.