டின்னிடஸ் எனப்படும் காது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 


1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் சமீபத்தில் திரையுலகில் தனது 30வது ஆண்டை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.






வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பு அஜித் விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிக்கும் அஜித் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்குவார். 


அந்த வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் டின்னிடஸ் தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” நிபந்தனையற்ற அன்பு எப்போதும் - அஜித்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சுரேஷ் சந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னிடம் அஜித் இந்த பாதிப்பு குறித்து தகவலை சொன்னதாகவும், இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதால் இத்தகைய பதிவை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 










டின்னிடஸ் என்பது உங்கள் காதுகளில் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கத்திலும் வித்தியாசமான சத்தம் கேட்கும். இப்படி கேட்கும் சத்தம் வெளிப்புற ஒலியால் ஏற்படாது. இதனால் அருகிலிருப்பவர்களால் அதைக் கேட்க முடியாது. இது ஒரு பொதுவான பிரச்சனை என்ற போதிலும் 15% முதல் 20% மக்களை பாதிக்கிறது.குறிப்பாக வயதானவர்களை இது அதிகம் தாக்குகிறது. காது கேளாமை அல்லது தலைச்சுற்றல், காதில் மெழுகு அளவுக்கு அதிகமாக வெளிப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.