வெளிநாட்டு மோகம் யாரை தான் விட்டது. அது எந்த அளவுக்கு பலரின் வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றியுள்ளது என்பதை முதல் முறையாக திரையில் காட்சிப்படுத்தியது உணர்வுபூர்வமான திரைக்கதையை மக்களின் மனங்களை வென்ற இயக்குநர் சேரனின் 'வெற்றிகொடி கட்டு' திரைப்படம். உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பொங்க வைத்த இப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


 



 


மனித உறவுகளை மதித்து மண்மணம் மாறாத படைப்புக்களை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர் இயக்குநர் சேரன். வெளிநாட்டு கனவுக்காக உழைத்து சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை ஏஜென்ட் மூலம் ஏமாந்து நிற்கதியாக நிற்கும் பல்லாயிரம் கணக்கான அப்பாவிகளின் கதையை படம் பிடித்தது 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படம். பார்த்திபன், முரளி, மீனா, மாளவிகா, வடிவேலு, மனோரமா, சார்லி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட ஏராளமான திறமையான நடிகர்கள் வாழ்ந்து இருந்தனர். அனைவருமே மிகைப்படுத்தல் இன்றி கதைக்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். 



வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து குடும்பத்தை முன்னேற்றலாம் என நினைத்து பணத்தை ஏமாறும் கட்டத்தில் பார்த்திபன் மற்றும் முரளி சந்திப்பு நடக்கிறது. பணம் தொலைத்த விஷயம் தெரிந்தால் குடும்பத்தை சேர்ந்தவர்களின் நிலை என்ன ஆகும் என மிகவும் வருத்தத்தில் இருந்த  இருவரும் குடும்பத்தை நம்ப வைப்பதற்காக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். தற்காலிகமாக இருவரும் வீடு மாறி செல்கிறார்கள். அவர்கள் இருவரின் முயற்சியால் நண்பனின் குடும்பத்தை பொருளாதார ரீதியாக  முன்னேறுகிறார்கள். இதனிடையே பார்த்திபன் தங்கை மளவிகாவுக்கு முரளி மீது காதல் ஏற்படுகிறது. மோசடி செய்த ஏஜென்ட் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் ஏமாந்த பணம் திரும்ப கிடைக்கிறது. இரு  குடும்பமும் கிளைமாக்ஸில் ஒன்றிணைகிறது.


 




ஒரு நகைச்சுவை நடிகருக்கு குணச்சித்திர கதாபாத்திரம் கொடுக்கப்பட்டால் அவரின் நடிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை வாழ்ந்து காட்டி இருந்தார் சார்லி. பார்த்திபன் மற்றும் முரளி தான் படத்தின் கதாநாயகர்கள் என்றாலும் அவர்களையும் கடந்து அப்பாவி பழனியாக பார்வையாளர்களின் நெஞ்சங்களை ஊடுருவி சென்று அவரின் நடிப்பால் கண்களை குளமாக்கினார். ஒரு துளி சிரிப்பும் இன்றி இயல்பான சோகத்தை வெளிப்படுத்தி ஒரு எளிய மனிதனின் தோரணையில் அசத்தி இருந்தார். 


 


படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது வடிவேலு - பார்த்திபன் காமெடி. அவை இன்று மீம் கிரியேட்டர்களுக்கு மெட்டீரியல்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் 'கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. 


 


சமூகப் பிரச்சினைகளைப் பேசிய சிறந்த திரைப்படம் என்ற பிரிவின் கீழ் தேசிய விருதை பெற்றது. அது தவிர சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் வென்றது. இயக்குனர் சேரனுக்கு கிடைத்த முதல் தேசிய விருது இதுவாகும். இப்படி பட்ட அழுத்தமான படைப்புகள் மூலம் மக்களுக்கு எளிதில் விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும் என்பதை சாதித்து காட்டினார்.